டில்லி உஷ்ஷ்ஷ்: நிதின் கட்கரி ஓரங்கட்டப்படுகிறார்?
டில்லி உஷ்ஷ்ஷ்: நிதின் கட்கரி ஓரங்கட்டப்படுகிறார்?
ADDED : அக் 06, 2024 02:25 AM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் -பா.ஜ., -தேசியவாத காங்., கூட்டணி ஆட்சியில் உள்ளது. 'மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பது கஷ்டம்' என சொல்லப்பட்டு வருகிறது. இதனால், தேர்தல் வியூகம், வேட்பாளர்கள் தேர்வு என, அனைத்தையும் தானே கவனித்து வருகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா.
வேட்பாளர் தேர்வு செய்ய, ரகசிய, 'சர்வே' நடத்துவது பா.ஜ., வழக்கம். ஆனால், இப்படி சர்வே வாயிலாக, தேர்வானவர்களை எதிர்த்து, அதிருப்தியாளர்கள் போட்டி யிட்டு வெற்றி பெற்றுள்ளதால், இந்த ரகசிய சர்வே வழக்கத்தை, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கைவிட்டு விட்டார் அமித் ஷா.
மத்திய அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அமைச்சர்களில் ஒருவர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி; இவர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 'எதிர்க்கட்சிகள், என்னை பிரதமர் பதவியில் அமர்த்த முயற்சித்தன' என, பேட்டி ஒன்றில் கூறினார். 'கட்கரி மஹாராஷ்டிர முதல்வராக வருவார்' என சொல்லப்பட்ட போது, பா.ஜ., தலைமை தேவேந்திர பட்னவிஸை முதல்வராக்கியது.
ஆனால், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கட்கரியை ஓரம்கட்டி வருகிறது கட்சி தலைமை. மஹாராஷ்டிராவில், கட்கரியின் சொந்த மாவட்டமான விதர்பாவில் சமீபத்தில் நடந்த பா.ஜ., கூட்டங்களில் பிரதமர், அமித் ஷா பங்கேற்றனர்; ஆனால், கட்கரி பங்கேற்கவில்லை.
அப்போது அவர், ஜம்மு - காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் இருந்தார். பிற்பாடு, நாக்பூரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்கரி, 'பா.ஜ., கூட்டணி அரசில், பெண்களுக்கு, 1,500 ரூபாய் வழங்கும் திட்டம், எப்படி மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது' என பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்போ கட்கரிக்கு ஆதரவாக உள்ளது. தன் கூட்டணி அரசின் திட்டத்தை விமர்சித்த கட்கரியின் நிலையை, பா.ஜ., தலைமை எப்படி ஏற்றுக் கொள்ளும் என்பது, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிந்துவிடும்.