ADDED : பிப் 04, 2024 01:20 AM

புதுடில்லி: சினிமாக்களில் கடுமையான சண்டை காட்சிகளில் ஹீரோ நடித்தால், அடிபட்டுவிடும் என்பதால், ஹீரோ மாதிரியே இருக்கும் ஆட்களை இந்த சண்டை காட்சிகளில் பயன்படுத்துவர்; இவர்களை டூப் அல்லது டபுள் என, அழைக்கின்றனர்.
இந்த டூப் இப்போது அரசியலிலும் நுழைந்து விட்டதா? 'ஆம்' என்கிறார் பா.ஜ.,வின் தலைவரும், அசாம் மாநில முதல்வருமான ஹிமந்த பிஸ்வ சர்மா. ராகுலின் நடை பயணம் அசாமில் நடந்தது.
அதில், 'ராகுல் மாதிரியே உருவ ஒற்றுமை உள்ள நபர் பங்கேற்றுள்ளார்; நடை பயணத்தில் அதிக பட்சம் ராகுலுக்கு பதிலாக இந்த டூப் தான் நடந்துள்ளார்' என்கிறார்.
'இது குறித்து அசாம் மீடியாக்களில் சில செய்திகள் வந்தன... இது வெளியான உடனேயே அந்த டூப் வெளியேறி விட்டார்' எனவும் சொல்கிறார். 'அந்த டூப் யார் என கண்டுபிடித்து விட்டோம்; விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, இது குறித்து விபரங்களை வெளியிட உள்ளோம்' என்கிறார் சர்மா.
இந்த சர்மா ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர். இவருக்கும், ராகுலுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் கட்சியை விட்டு வெளியேறி, பா.ஜ.,வில் சேர்ந்தவர். சர்மாவின் டூப் விஷயத்தைக் கேட்டு, 'அவருக்கு வேறு வேலை இல்லை' என, சிரிக்கின்றனர் காங்கிரசார்.