டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கமான சிவ்ராஜ் சிங் சவுகான்!
டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கமான சிவ்ராஜ் சிங் சவுகான்!
ADDED : அக் 27, 2024 04:51 AM

போபால்: பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா அமைச்சரானதால், வேறொருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். இதற்கு, இப்போது மத்திய அமைச்சராக உள்ள, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் பெயர் அடிபட்டது. ஆனால், இப்போது அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார் பிரதமர் மோடி. இதனால் அவர், பா.ஜ.,வின் தேசிய தலைவராக மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.
தான் அறிவித்த திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பதை கண்காணிக்க, ஒரு குழுவை அமைத்துள்ளார் மோடி; இதன் தலைவராக சிவ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மோடி அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆய்வு செய்வதுடன், அவற்றை விரைவுபடுத்தவும், இந்த குழு உத்தரவுகள் பிறப்பிக்கும்.
பிரதமர் அலுவலக அதிகாரிகளும் இந்த குழுவில் உள்ளனர். மத்திய அமைச்சகத்தின் செயலர்கள், இந்த குழுவின் ஆலோசனையில் பங்கேற்பர்.
மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி, சரியான முறையில், சம்பந்தப்பட்ட திட்டங்களுக்காக செலவிடப்படுகிறதா என்பதையும் இந்த குழு கண்காணிக்கும்.
தான் துவங்கிய பல திட்டங்கள், நிறைவேற்றப்படாமல் இருப்பதால், இப்படி ஒரு கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளாராம் மோடி. இந்த குழு, பிரதமர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் கூடி, திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தும்.
'மூன்றாவது முறையாக மத்திய பிரதேசத்தில் பா.ஜ., வெற்றி பெற, சிவ்ராஜ் காரணம் என்பதை நன்கு அறிந்துஉள்ளார் மோடி. அதனால் தான் இந்த புதிய பதவியாம். அத்துடன், இப்போது மோடிக்கு நெருக்கமானவர் சிவ்ராஜ் தான்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.