ADDED : செப் 01, 2024 03:06 AM

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு காலண்டர் அச்சடித்து, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்புவது வழக்கம். அத்துடன் அரசு தரப்பில், டைரியும் வழங்கப்படும். மேலும், மத்திய அரசின் பொது நிறுவனங்களும் காலண்டர், டைரி அச்சடிக்கும். ஆனால், கடந்தாண்டு இந்த பொது நிறுவனங்கள் இந்த தயாரிப்பை நிறுத்தி விட்டன.
அடுத்த ஆண்டிற்கான காலண்டர்கள் அச்சடிக்க ஆரம்பிக்கும் சமயத்தில், மத்திய அரசு ஒரு உத்தரவிட்டுள்ளதாம். அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், காலண்டரையும் டிஜிட்டல் மயமாக்க இந்த திட்டமாம்.
இதற்கு பதிலாக ஒரு, 'ஆப்' கொண்டு வர திட்டம்; அதற்கான ஏற்பாடுகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்து வருகிறாராம்.
அச்சடிக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள், காலண்டரில் இருக்கும்; இவற்றை டிஜிட்டல் முறையில் கொண்டு வரப்போகிறாராம் அஸ்வினி. காலண்டர்கள் அச்சடிக்க, 240 கோடி ரூபாய் செலவாகிறது; இனிமேல் அது மிச்சமாகும். அச்சடித்த காலண்டரில், ஒவ்வொரு பக்கமும் மோடியின் முழு புகைப்படம் இருக்கும். ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகத்திலும், காலண்டரில் மோடியின் படம் தான் பிரதானமாக இருக்கும்; டிஜிட்டல் காலண்டர் வந்தால், மோடியின் படம் அலுவலக சுவற்றில் இருக்காது. இதுதான் ஒரு குறை!