ADDED : ஜன 05, 2025 02:58 AM

புதுடில்லி: ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1ல், டில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர் மோடி. அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய விஷயங்கள் முடிந்ததும், அனைத்து அமைச்சர்களிடமும் தனிப்பட்ட முறையில் பேசினார்.
'பல விஷயங்களை, அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும். தேவையில்லாத போன் கால்களை எடுக்க வேண்டாம். ஒரு அமைச்சர், இன்னொரு அமைச்சருக்கு கடிதம் எழுதினால், அதை மீடியாவிற்கு கொடுக்க வேண்டாம். செயற்கை நுண்ணறிவு வாயிலாக, அமைச்சர்களை சிக்க வைக்க முயற்சிகள் நடக்கும்' என, நீண்ட, 'அட்வைஸ்' அளித்துள்ளாராம் மோடி.
'அரசின் கொள்கைகளை, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மட்டும் தான் பேசுவார்; மற்றவர்கள் பேச வேண்டாம். மீடியாக்களிடமும் அதிகம் பேச வேண்டாம்' என, எச்சரிக்கை விடுத்துள்ளாராம் மோடி.
கூட்டம் முடிந்த உடன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சக அமைச்சர்களிடம், 'கடந்த 10 ஆண்டுகளாக அரசு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது; எனவே, பிரதமர் சொன்னது சரிதான்... அதை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்' என்றாராம்.
டில்லி அரசியல் வட்டாரங்களில், வேறொரு செய்தியும் உலா வருகிறது. விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்பது தான் அந்த பரபரப்பு செய்தி. சில அமைச்சர்கள் நீக்கப்படுவர் என சொல்லப்படுகிறது. எந்த அமைச்சர்கள் நன்றாக செயல்பட்டனர், யார் வேலை செய்யவில்லை என்கிற பட்டியலை பிரதமர் தயார் செய்து விட்டாராம்.
'கேரளாவிலிருந்து, முதன் முறையாக வெற்றி பெற்று, எம்.பி.,யான நடிகர் சுரேஷ் கோபிக்கு, இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார். 'அமைச்சர் பதவியை நான் கேட்கவில்லை' எனவும் சொன்னார். இதனால், அவர் அமைச்சரவையில் நீடிக்க மாட்டார்' என சொல்லப்படுகிறது.