UPDATED : ஆக 10, 2025 07:06 AM
ADDED : ஆக 10, 2025 02:06 AM

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், தற்போது நடக்கிறது. ஆனால், பீஹாரில் தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை முடக்கி வருகின்றன.
இதில், காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சபையை நடத்தவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.
அதே சமயம், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர், காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. ராஜ்யசபாவில் அந்த அளவிற்கு பிரச்னை இல்லாததால், விவாதங்கள் மற்றும் சில மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இதனால், ராகுல் கோபப்பட்டு, 'நாங்கள் லோக்சபாவை முடக்கி வரும்போது, ராஜ்யசபா மட்டும் எப்படி அமைதியாக நடக்கலாம்?' என, கேள்வி எழுப்பினாராம். இதையடுத்து ராஜ்யசபா நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கிவிட்டன.