'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி வதந்தி பரப்புவோர் தேச துரோகிகள்: பா.ஜ.,
'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி வதந்தி பரப்புவோர் தேச துரோகிகள்: பா.ஜ.,
ADDED : ஆக 10, 2025 03:08 AM

சென்னை : 'ஆப்பரேஷன் சிந்துார் குறித்து, எதிர்க்கட்சிகள் வ தந்திகளை பரப்பினால், அவர்கள் அப்பட்டமான தேச துரோகிகள் என்பது ஊர்ஜிதமாகிவிடும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
காஷ்மீர் பஹல்காமில், பல அப்பாவி இந்தியர்களை அநியாயமாக சுட்டு படுகொலை செய்ததற்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற நடவடிக்கையை முன்னெடுத்து, பாகிஸ்தானில் பல பயங்கரவாத ஏவுதளங்களை அழித்தொழித்தது, நம் ராணுவம்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் உச்சி முகர்ந்து பாராட்ட வேண்டிய, நம் ராணுவத்தின் வீரதீர செயல்களின் மீது சந்தேக அமிலத்தை ஊற்றி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.
எத்தனை ஆதாரங்கள் இருந்தாலும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட, எத்தனை தலைவர்கள் விளக்கி கூறினாலும், எதையும் காதில் வாங்கி கொள்ளாது பொய் வதந்திகளை பரப்பி, அவநம்பிக்கையை விதைப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் புத்தியில் உரைக்கும் படி, இந்திய விமானப்படை தலைவர் ஏ.பி.சிங், ஆப்பரேஷன் சிந்துார் குறித்து விளக்கமாக எடுத்து கூறியுள்ளார்.
இதையும் மீறி, ஆப்பரேஷன் சிந்துார் குறித்து, எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பினால், அவர்கள் தேச துரோகிகள் என்பது ஊர்ஜிதமாகிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.