ADDED : ஆக 11, 2024 02:15 AM

புதுடில்லி: பார்லிமென்டில் பலத்த பாதுகாப்பு உள்ளது. 3,500க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். உள்ளே யார் வந்தாலும், மூன்று முறை அவர்களை பரிசோதனை செய்தபின்தான் அனுமதிக்கின்றனர். ஏற்கனவே, பார்வையாளர் மாடத்திலிருந்து ஒருவர் சபையில் குதித்து பிரச்னையை ஏற்படுத்தியால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் திடீரென மூன்று குரங்குகள் பார்லிமென்ட்டுக்குள் நுழைந்தன. இவைகளை விரட்ட, பாதுகாப்பு வீரர்கள் எவ்வளவோ முயன்றனர். சுட்டால் பிரச்னை. ஏனெனில், குரங்குகளை ஹனுமனின் மறு உருவமாக வடமாநிலத்தவர்கள் மதிப்பதுடன், ஆராதிக்கவும் செய்கின்றனர்.
எம்.பி.,க்களை குரங்குகள் தாக்குமோ, அவர்களிடம் உள்ள பைகளை பிடுங்குமோ என, பாதுகாப்பு வீரர்கள் பயந்தனர். கடைசியில், குரங்கு பிடிப்பவர்களை அழைத்து வந்து, பிரச்னையை தற்காலிகமாக தீர்த்து வைத்தனர். பார்லிமென்ட் மற்றும் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள இடங்களுக்கு அருகே, 'ரிட்ஜ்' என, அழைக்கப்படும் காடு உள்ளது; அங்கிருந்துதான் குரங்குகள் வருகின்றன. டில்லியில் பார்லிமென்ட் அருகே அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களில், எப்போதும் குரங்குகள் ஓடிக்கொண்டிருக்கும்.
இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள், படிக்கட்டுகளில் செல்லும்போது, குரங்குகளைக் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். குரங்குகளிடமிருந்து எம்.பி.,க்களை பாதுகாப்பது, இனி பெரும் பிரச்னையாக இருக்கும் போலிருக்கிறது.

