ADDED : டிச 08, 2024 12:17 AM

புதுடில்லி: சமீபத்தில் வங்கிகள் தொடர்பான சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. ராஜ்யசபா ஒப்புதல் கொடுத்த பின், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்; அவர் ஒப்புதல் அளித்த உடன், இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும். 'இந்த புதிய சட்ட திருத்தத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது; அது உண்மை கதை' என்கின்றனர் மூத்த அதிகாரிகள்.
ஒவ்வொரு தீபாவளியின்போதும், நாட்டின் எல்லை பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து, அவர்களோடு தீபாவளி கொண்டாடுவது பிரதமர் மோடியின் வழக்கம்.
இப்படி ஒரு முறை சென்றபோது, ஒரு ராணுவ வீரர் மோடியிடம்,- 'என் அப்பாவும் ராணுவத்தில் இருந்தார். அவர் பணியில் இருந்தபோது, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவருடைய வங்கி கணக்கில் 40 லட்சம் ரூபாய் இருந்தது. இந்த பணம் அனைத்தும் என் அம்மாவிற்கு சென்றுவிட்டது; மகன், மகள்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை' என்று கூறி வருத்தப்பட்டாராம்.
இதையடுத்து, டில்லி திரும்பிய மோடி, நிதி அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் இந்த விஷயத்தைக் கூறி, 'இதற்கு தீர்வு காண வேண்டும்' என கேட்டுக் கொண்டாராம்.
வங்கி கணக்கை ஒருவர் துவங்கும்போது, அவர் இறந்த பின், இந்த பணம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை, 'நாமினேஷன்' வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.
பலர், இந்த நாமினேஷன் செய்யாமல் இருப்பதால், அவர்கள் இறந்த பின், அவர்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம், எவருக்கும் கிடைக்காமல் அப்படியே இருக்கும். இப்படி, ரிசர்வ் வங்கி கணக்கில், 72,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாம்.
கஷ்டப்பட்டு ஒருவர் சேர்த்த பணம், எவருக்கும் கிடைக்காமல் ரிசர்வ் வங்கியிடம் இருப்பது, ஒவ்வொரு ஆண்டும் 26 சதவீதம் உயர்ந்தபடியே போகிறதாம்.
புதிய சட்ட திருத்தத்தின்படி, ஒருவர் நான்கு பேரை நாமினியாக நியமிக்கலாம்; இதற்கு முன், ஒருவரைத் தான் நியமிக்க முடியும். அத்துடன், ஒவ்வொரு நாமினிக்கும், எத்தனை சதவீதம் பணம் தர வேண்டும் என்பதையும், நாமினேஷன் செய்யும்போது தெரிவிக்கலாம்.