டில்லி உஷ்ஷ்ஷ்: டில்லியை கலக்கும் நீல நிற அரசியல்
டில்லி உஷ்ஷ்ஷ்: டில்லியை கலக்கும் நீல நிற அரசியல்
ADDED : டிச 22, 2024 02:20 AM

புதுடில்லி: 'உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கருக்கு எதிராக சபையில் பேசி அவமரியாதை செய்துவிட்டார்' என, காங்கிரஸ் குற்றம்சாட்டி சபையை ஸ்தம்பிக்க வைத்தது. 'என் பேச்சை வேண்டுமென்றே திரித்து விட்டனர் காங்கிரசார்' என, அமித் ஷா சொல்கிறார்.
'அம்பேத்கரை தொடர்ந்து அவமதிப்பு செய்து வருவது காங்கிரஸ் தான். நேரு காலத்தில் துவங்கி, இன்று வரை அது தொடர்கிறது' என, மோடியும், பேசி உள்ளார். இந்நிலையில் அமித் ஷாவிற்கு எதிராக பார்லிமென்டில் போராட்டம் நடத்தியது காங்கிரஸ்.
நீல நிற டி - ஷர்ட் அணிந்து, போராட்டத்திற்கு வந்தார் ராகுல். சகோதரி பிரியங்காவும் நீல நிற உடை அணிந்திருந்தார். 'நீங்களும் நீல புடவை கட்டிக்கொண்டு வாருங்கள்' என, கனிமொழிக்கு குறுஞ்செய்தி அனுப்பினாராம் பிரியங்கா. இப்படி எதிர்க்கட்சிகள் அனைவருமே நீல நிறத்தில் இருந்தனர்.
கடந்த 1942லிருந்து பட்டியலினத்தாரோடு அரசியலுடன் சம்பந்தப்பட்டது நீல நிறம். இவர்களுக்காக அம்பேத்கர் ஒரு அமைப்பை துவங்கியபோது, இந்த அமைப்பின் கொடி நீல நிறத்தில் இருந்தது; நடுவே அசோக சக்கரம். அம்பேத்கர் ரிபப்ளிகன் கட்சியை 1956ல் துவங்கியபோது, இதே நீல நிற கொடியை கட்சியின் கொடியாக அறிவித்தார். தலித் மக்களுக்காக துவங்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி கொடியிலும் நீல நிறம் உள்ளது. இப்படி இந்த நீல நிறம் பட்டியலினத்தாரின் முன்னேற்றத்தில் ஒரு இடம் பிடித்துவிட்டது.