ADDED : டிச 15, 2024 03:49 AM

புதுடில்லி: வரும் பிப்ரவரியில் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. மதுபான லைசென்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதனால், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்; இதைஅடுத்து ஆதிஷி முதல்வர் ஆனார்.
'டில்லி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என, கெஜ்ரிவால் சொல்லிவிட்டார். மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு, 20 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார்.
இதில், 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும், 'சீட்' வழங்கப்படவில்லை; இந்த தொகுதிகளுக்கு புதுமுகங்களை அறிவித்துள்ளார் கெஜ்ரிவால். அத்தோடு துணை முதல்வராக இருந்து, மதுபான ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிறை சென்ற மணீஷ் சிசோடியாவின் தொகுதியும் மாற்றப்பட்டுள்ளது.
முதல்வராக, தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்தவர் கெஜ்ரிவால். கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், 70ல் 62 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது, ஆம் ஆத்மி.
'இந்த முறை அந்த அளவிற்கு வெற்றி பெற முடியாது' என்கின்றனர் பா.ஜ.,வினர். ஒரு சாதாரண மனிதன் என சொல்லிக் கொள்ளும் கெஜ்ரிவால் தன் பங்களாவில், மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து எப்படி ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பதற்கான வீடியோவை, பா.ஜ., வெளியிட்டுள்ளது; இதற்கு, கெஜ்ரிவால் பதிலே சொல்லவில்லை.
மேலும், 'பா.ஜ.,விலோ அல்லது காங்கிரசிலோ டில்லி முதல்வராக வர, ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த தலைவர் இல்லை; இதனால் இந்த முறையும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த முறை வந்த அளவிற்கு, மெஜாரிட்டியாக தற்போது வர முடியாது' என்கின்றனர் நடுநிலையாளர்கள்.