பனிப்பொழிவின் நடுவே டில்லி அரசியல் களம் சூடு பிடித்தது! சட்டசபை தேர்தல் பணியில் கட்சிகள் மும்முரம்
பனிப்பொழிவின் நடுவே டில்லி அரசியல் களம் சூடு பிடித்தது! சட்டசபை தேர்தல் பணியில் கட்சிகள் மும்முரம்
ADDED : டிச 07, 2024 11:26 PM

டி ல்லி சட்டசபைக்கு அடுத்த இரு மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் 'ஹாட்ரிக்' வெற்றிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி முயற்சிப்பதால், அங்கு கடும் பனிப்பொழிவின் நடுவே அரசியல் களம் சூடு பிடித்துள் ள து.
கடந்த 2012ல் அரவிந்த் கெஜ்ரிவாலால் துவக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, 2013ல் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியது.
இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எட்டு இடங்களில் வென்ற காங்., ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைத்தது.
தீவிர நடவடிக்கை
கெஜ்ரிவால் முதல்வராக ஆதரவு கொடுத்த காங்., லோக்பால் எனப்படும் ஊழல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற ஆதரவளிக்கவில்லை. இதனால், வெறும் 49 நாட்களில் அவர் ஆட்சியை இழந்தார்.
அடுத்ததாக 2015ல் நடந்த தேர்தலில், 67 இடங்களை கைப்பற்றி ஆட்சி கட்டிலில் முழு நம்பிக்கையுடன் கெஜ்ரிவால் அமர்ந்தார். மீதமுள்ள மூன்று இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.
காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி 62 இடங்களையும், பா.ஜ., எட்டு இடங்களையும் கைப்பற்றின.
இரண்டு முறையும், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, தற்போது தனி பெரும்பான்மையுடன் ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது.
மதுபான கொள்கையில் ஊழல், அரசு பங்களாவில் ஆடம்பர செலவு என பல்வேறு குற்றச்சாட்டுகளால் நெருக்கடிக்கு உள்ளான ஆம் ஆத்மி, பல்வேறு பொறுப்புகளுடன் அடுத்த ஆண்டு பிப்ரவரி யில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 11 வேட்பாளர்களின் பெயரை முன்னதாகவே அறிவித்த அக்கட்சி, தேர்தல் பணியையும் முதல் ஆளாக துவங்கியுள்ளது.
இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலை காங்கிரசுடன் இணைந்து சந்தித்த ஆம் ஆத்மி, சட்டசபை தேர்தலில் தனியாக களமிறங்குகிறது. இது தொடர்பான அறிவிப்பை கெஜ்ரிவாலும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக அறிவித்துள்ளன.
இதனால், டில்லி சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ., என மும்முனை போட்டி நிலவ உள்ளது. தனித்து போட்டியிடுவது என முடிவானதை அடுத்து, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.
குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது பின்னடைவை ஏற்படுத்தினாலும், அவற்றை சமாளிப்பதற்கான வழிமுறைகளை அக்கட்சி தேடத் துவங்கியுள்ளது. டில்லி மேயர் தேர்தலில் பெற்ற வெற்றியின் அடிப்படையில், மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வேலையை கெஜ்ரிவால் முடுக்கிவிட்டுள்ளார்.
அதேசமயம், கடந்த 25 ஆண்டுகளாக டில்லியில் ஆட்சியை இழந்த பா.ஜ., இந்த முறை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கியுள்ளது. இதற்காக, தலைநகர் முழுதும் அரசியல் நடவடிக்கைகளை அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
மக்களின் தேவை குறித்த விபரங்களை பெற, பல்வேறு சமூகங்களில் கருத்தை பெறும் முயற்சியில் டில்லி பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மியின் இலவச பாதையையும் தேர்ந்தெடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
தேர்தல் போட்டியில் காங்கிரஸ் தன் பணிகளை இன்னும் முன்னெடுக்காத நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளது.
சபதம் நிறைவேறுமா?
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த போது, 'மக்கள் மீண்டும் ஓட்டளித்த பின்னரே முதல்வராவேன்' என சபதம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வாரா, இல்லை வீழ்வாரா என்பது பிப்ரவரியின் இறுதியில் தெரிய வரும்.
- நமது சிறப்பு நிருபர் -