sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'வளர்ந்த நாடு' கனவு: சீனாவை பின்தொடரும் இந்தியா

/

'வளர்ந்த நாடு' கனவு: சீனாவை பின்தொடரும் இந்தியா

'வளர்ந்த நாடு' கனவு: சீனாவை பின்தொடரும் இந்தியா

'வளர்ந்த நாடு' கனவு: சீனாவை பின்தொடரும் இந்தியா

6


ADDED : ஜன 25, 2026 05:17 AM

Google News

6

ADDED : ஜன 25, 2026 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'செஸ்' எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் முதல் 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' திட்டம் வரை, தனது பொருளாதார வளர்ச்சிக்காக சீனாவை நகலெடுத்துக் கொண்டிருக்கிறது இந்தியா. 'உள்கட்டமைப்பு அரக்கன்' என்று பெயர் பெற்ற சீனாவை பின்பற்றி, நாடெங்கிலும் சாலைகள், பாலங்களை இந்தியா வேகவேகமாக கட்டமைத்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ஏற்றுமதிதான் துரிதமான வழி என்பதை, சீனாவை பார்த்து புரிந்து கொண்ட இந்தியா, உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு, பாரத் ட்ரேட் நெட், ஏற்றுமதி வரி சலுகைகள் போன்றவற்றை விரிவாக அமல்படுத்தி வருகிறது.

நீண்ட காலமாக சோஷலிச, கலப்பு பொருளாதாரத்தை கடைப்பிடித்து வந்த இந்தியா, தாராளமயமாக்கலில் இறங்கியதற்கும் சீனாவின் வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். கல்வி கொள்கை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மனித அறிவு வளம் மிக முக்கியமானது. அது அதிகமிருந்தால்தான் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப மேம்பாடுகளை நாடு அடைய முடியும்.

அந்த வளத்தை பெருக்க சீனா மேற்கொண்ட நடவடிக்கையை போலவே, ஜி.இ.ஆர்., எனப்படும் உயர்கல்வி பெறுவோர் விகிதத்தை 100 சதவீதமாக்க தனது புதிய கல்வி கொள்கையில் இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 1960களில் இருந்தே, சீனாவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கை பல்கி பெருகியது.

இந்தியாவோ, இதில் பின்தங்கியிருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. ஆண்டுக்கு 15 லட்சம் புதிய இன்ஜினியர்கள் உருவாகி, கல்லுாரிகளில் இருந்து வெளிவருகின்றனர். சீனாவை பார்த்து இந்தியா செய்த இன்னொரு காரியம், வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட அறிவார்ந்த இந்தியர்களை தாயகத்துக்கு திரும்ப அழைத்து வருவதற்கான திட்டங்களை அறிவித்தது.

அதற்காக சீனா, 'ஆயிரம் திறமையாளர்கள் திட்டம்' என்று அமல்படுத்தினால், இந்தியாவோ, ஏ.என்.ஆர்.எப்., ராமானுஜன் கல்வி உதவித் தொகை திட்டம், வஜ்ரா திட்டம் என்று அதை வேறு பெயர்களில் அமல்படுத்துகிறது.பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியை அதிகரிப்பது மட்டும் போதாது, ஏற்றுமதி சந்தைகளை உருவாக்குவதும் அவசியம் என்பதை தனது 'பெல்ட் அண்டு ரோடு' திட்டத்தின் வாயிலாக இந்தியாவுக்கு சீனா உணர்த்தியிருக்கிறது.

அதுதான், ஆர்மீனியா, மொரீஷியஸ், கென்யா, செஷல்ஸ் போன்ற நாடுகள் இந்திய ராணுவ தளவாடங்களை வாங்குவதற்காக எக்ஸிம் வங்கி வாயிலாக கடன் அளிக்கும் திட்டம், ஐ.எம்.இ.சி., எனப்படும் 'இந்தியா மத்திய கிழக்கு வழித்தட திட்டம்', ஐ.என்.எஸ்.டி.சி., எனப்படும் 'வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தட' திட்டங்களை இந்தியா செயல்படுத்த துாண்டியிருக்கிறது. ஜப்பானை காப்பியடித்து சீனா 'ஒரு கிராமம், ஒரு தயாரிப்பு' திட்டத்தை அமல்படுத்தியது.

குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட ஒரே ஒரு பொருளை மட்டுமே தயாரிக்க செய்து, அதில் அங்குள்ளவர்களை நிபுணத்துவம் பெற செய்வதுதான் அதன் நோக்கம்.அதை சீனாவிடமிருந்து இந்தியா காப்பியடித்து 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' என்ற பெயரில் அமல்படுத்தியிருக்கிறது.

தனி நபர் வருவாய் இப்படி பல்வேறு வழிமுறைகளிலும் சீனாவை பின்பற்றுவதால் இந்தியாவும் எதிர்காலத்தில் வளர்ச்சியடைந்த நாடாகுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

உலக வங்கி, நாடுகளை குறைந்த வருவாய் நாடு, குறை நடுத்தர வருவாய் நாடு, உயர் நடுத்தர வருவாய் நாடு, உயர் வருவாய் நாடு என்று 4 பிரிவுகளில் வகைப்படுத்துகிறது. இதில் உயர் வருவாய் நாடுகள்தான் வளர்ச்சியடைந்த நாடு என்ற பிரிவின் கீழ் வருகின்றன.

அவ்வாறு வர வேண்டுமென்றால், ஒரு நாட்டின் ஜி.டி.பி ., அடிப்படையிலான தனி நபர் வருவாய் கிட்டத்தட்ட, ஆண்டுக்கு 12.82 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். சீனாவின் தனி நபர் வருவாய் இப்போதே 11.90 லட்சம் ரூபாயாக இருக்கிறது. எனவே, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அது வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலையை எட்டும் அளவில் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் தனி நபர் வருவாயோ இப்போது வெறும் 2.75 லட்சம் ரூபாயாகத்தான் உள்ளது.

கிட்டத்தட்ட சீனர்களின் ஜி.டி.பி., வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு. எனவே, சீன பொருளாதார திட்டங்களை அப்படியே அச்சு அசலாக பின்பற்றினால் கூட, வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா ஆவதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 8 சதவீதத்துக்கு மேல் இருந்தால்தான் 20 ஆண்டுகளுக்கு பிறகாவது இந்தியா வளர்ச்சியடைந்த நாடாகும் என்பது அவர்களின் கணிப்பு. 1978இல் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ஜி.டி.பி.,யில் அவ்வளவு பெரிய வித்தியாசமில்லை.

சீன ஜி.டி.பி., கிட்டத்தட்ட 13.74 லட்சம் கோடி ரூபாயாகவும், இந்திய ஜி.டி.பி., கிட்டத்தட்ட 12.57 லட்சம் கோடி ரூபாயாவும் இருந்தது. ஆனால், 2025ல் சீனாவின் ஜி.டி.பி., கிட்டத்தட்ட 1,600 லட்சம் கோடி ரூபாயாகவும், இந்தியாவின் ஜி.டி.பி., கிட்டத்தட்ட 317 லட்சம் கோடி ரூபாயாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

தாராளமயமாக்கலை சீனா 1978 முதலும், இந்தியா 1990களிலும் ஆரம்பித்ததுதான் இந்த இடைவெளிக்கு முக்கிய காரணம். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், சமூக சூழல்களில் உள்ள வேறுபாடு போன்ற பல காரணங்களும் உள்ளன.

இருந்தாலும், சீனாவை பின்பற்றுவதுடன் நில்லாமல் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்து கொண்டிருந்தால், உடனடியாக இல்லாவிட்டாலும் இன்னும் பல ஆண்டுகளுக்கு பிறகாவது இந்தியா வளர்ச்சியடைந்த நாடாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.






      Dinamalar
      Follow us