பா.ஜ., கூட்டணியில் இருந்து விலக தினகரன் முடிவு: த.வெ.க., பக்கம் வருமாறு அழைப்பு
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலக தினகரன் முடிவு: த.வெ.க., பக்கம் வருமாறு அழைப்பு
ADDED : செப் 02, 2025 01:31 AM

பா.ஜ., கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விலகிய நிலையில், அதிருப்தியில் உள்ள அ.ம.மு.க.,வும், கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியது. பா.ம.க., - அ.ம.மு.க., - பன்னீர் செல்வம் அணி - புதிய நீதிக்கட்சி - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து, பா.ஜ., தேர்தலை சந்தித்தது.
இக்கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து, அ.தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இத்தேர்தலில் தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளை கூட்டணியில் இணைத்து களம் இறங்கிய அ.தி.மு.க.,வும் தோல்வியை தழுவியது.
அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரன் இருப்பதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழ னிசாமி விரும்பவில்லை.
அதிர்ச்சி இதன் காரணமாக, தமிழக பா.ஜ., தலைமையும், அவர்களை தவிர்க்க துவங்கியது. சமீபத்தில் பிரதமர் தமிழகம் வந்தபோது, அவரை சந்திக்க பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.
பன்னீர்செல்வம் நேரம் கேட்ட தகவல், தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த நிலையில், 'என்னிடம் கூறியிருந்தால், நானே நேரம் வாங்கி கொடுத்திருப்பேன். இது தொடர்பாக என்னை போனில் அழைத்ததாகச் சொல்வதும் சரியான தகவல் அல்ல' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கூறியது, பன்னீர்செல்வத்தை அதிர்ச்சி அடைய வைத்தது.
அதை தொடர்ந்து, பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். அதையும் பா.ஜ., தலைவர்கள் பொருட்படுத்தவில்லை. அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டு ம் என, தினகரன் மட்டும் குரல் கொடுத்தார். அதையும், பா.ஜ., தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை.
கடந்த மாதம் 30ம் தேதி, மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ., தலைவர்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டணியில் இல்லாத தே.மு.தி.க.,விற்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அ.ம.மு.க.,விற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. பழனிசாமி மனம் புண்படக்கூடாது என்பதற்காகவே தினகரன் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதிருப்தி இதனால் அதிருப்தி அடைந்த தினகரன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகலாமா என யோசிக்க துவங்கி உள்ளார். தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், செய்தியாளர் சந்திப்பில், 'கடந்த 2006 சட்டசபை தேர்தலில், விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல், வரும் தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்' என்றார்.
இரு தினங்களுக்கு முன், திருச்சியில் செய்தியாளர்கள் பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., இருக்கிறதா என்ற கேள்விக்கு,''கூட்டணியில் இருக்கிறோமா என்பதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தான் பதில் சொல்ல வேண்டும். அடுத்து என்ன நிலை ப்பாட்டை எடுக்கப் போகிறோம் என்பதை டிசம்பரில் தெரிவிப்போம். தமிழகத்தில் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்,'' என்றார்.
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்ட பிறகும், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என கூறி வந்த தினகரன், தற்போது தன் நிலைப் பாடை மாற்றிக் கொண்டு, கூட்டணி குறித்து டிசம்பரில் தெரிவிப்போம் என்கிறார்.
பா.ஜ., கூட்டணியில் மதிப்பில்லை என்றால், பன்னீர்செல்வத்துடன் இணைந்து விஜயின் த.வெ.க., கூட்டணியில் இணைய அவர் ஆலோசித்து வருகிறார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பன்னீர்செல்வத்தை தொடர்ந்து, தினகரனும் விலக முடிவு எடுத்திருப்பது, பா.ஜ.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் எதிரொலியாக, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், ''லோக்சபா தேர்தலில் இருந்து தினகரன் எங்கள் அணியில் உள்ளார்,'' என்றார்.
இந்நிலையில், பா.ஜ., கூட்டணி மீதான தினகரனின் அதிருப்தி மனநிலையை தெரிந்து கொண்டு, அவரை த.வெ.க., பக்கம் அழைத்துச் செல்ல சிலர் அவரை தொடர்பு கொண்டு வருவதாக தகவல்.
- நமது நிருபர் -.