UPDATED : ஜன 03, 2025 04:20 AM
ADDED : ஜன 02, 2025 11:43 PM

புதுடில்லி,: நாட்டின் பல்வேறு சுகாதார நிலையங்களில், நோய்களை கண்டறிய இருக்க வேண்டிய குறைந்தபட்ச பரிசோதனை வசதிகளை வகைப்படுத்தும் தேசிய அத்தியாவசிய நோய் கண்டறிதல் பட்டியலின் திருத்தப்பட்ட வரைவை, ஐ.சி.எம்.ஆர்., முன்மொழிந்துள்ளது.
கிராமங்களில் துவங்கி, மாவட்டங்கள் வரை உள்ள அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச நோய் கண்டறியும் வசதிகளை, தேசிய அத்தியாவசிய நோய் கண்டறிதல் பட்டியல் என்ற பெயரில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2019ல் வெளியிட்டது.
அதன்பின், அந்த பட்டி யலில் முதல்முறையாக சில திருத்தங்களை ஐ.சி.எம்.ஆர்., முன்மொழிந்து உள்ளது.
அந்த திருத்தப்பட்ட பட்டியலின் விபரம்:
கிராமப்புற சுகாதார நிலையங்களில் நீரிழிவு நோய், மலேரியா, டி.பி., - எச்.ஐ.வி., சிபிலிஸ் உட்பட ஒன்பது வகையான நோய்களை கண்டறியும் சோதனைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் எக்ஸ்ரே, இ.சி.ஜி., சோதனைகளுடன், டெங்கு மற்றும் ஜாப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் உள்ளிட்ட நோய்களை கண்டறியும் வசதிகள் இருக்க வேண்டும்.
மாவட்ட மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ., மாமோகிராபி, எக்கோகார்டியோகிராபி உள்ளிட்ட பரிசோதனைகள் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த திருத்த வரைவு அறிக்கை பொதுவெளியில் வைக்கப்பட்டு, பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் பெறப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.