விசாரணையை மறைத்தாரா அதானி?: ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா 'செபி'
விசாரணையை மறைத்தாரா அதானி?: ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா 'செபி'
ADDED : நவ 23, 2024 12:44 AM

புதுடில்லி: அதானி குழுமம் மீது அமெரிக்க நீதித்துறையில் விசாரணை நடப்பதை, இந்திய பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்களிடம் தெரிவிக்காமல் மறைத்தது, இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து, அதானி குழுமம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
லஞ்சம்
இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்கார ரான தொழிலதிபர் கவுதம் அதானி, தன் தொழில் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலை பெறுவதற்காக இந்திய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்துஉள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த தகவலை மறைத்து, அமெரிக்கர்களிடமிருந்து கணிசமான முதலீடுகளை கவுதம் அதானி திரட்டியுள்ளார்.
இது, தண்டனைக்குரிய குற்றம் என்று அமெரிக்க அரசு வழக்கு பதிவு செய்து உள்ளது. அதன்படி, அதானியை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது.
அதானியின் உறவினரும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குநருமான சாகர் அதானி, அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது மோசடி, சதி குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன. இந்த விவகாரம் குறித்து, 'புளூம்பர்க்' ஊடகம் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியிட்டது.
கடமை
ஆனால், 'எங்கள் நிறுவன தலைவர் மீது எவ்வித விசாரணையும் நடக்கவில்லை' என, அதானி குழுமம் மறுத்தது. அமெரிக்க நீதித்துறையிடம் இருந்து எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் அளிக்கப்பட வில்லை என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், உள்நாட்டில் பங்கு வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய நிறுவனம் மீது அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்துவதை, பங்குச் சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் முறையாக தெரிவிக்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை.
அவ்வாறு தெரிவிக்காதது, பங்குச்சந்தை விதிகளை மீறும் செயல். எனவே, செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, அதானி குழுமம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துஉள்ளது.