மதுரையில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவர்னர் அர்லேக்கர் ஆய்வு செய்தாரா?
மதுரையில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவர்னர் அர்லேக்கர் ஆய்வு செய்தாரா?
UPDATED : ஜூலை 04, 2026 11:11 AM
ADDED : ஜூலை 04, 2026 04:52 AM

மதுரை: மதுரையில், நேற்று முன்தினம் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ஆர்.வி.அர்லேக்கர், 'வைகை நதியை மீட்டெ டுக்க யாரும் முன்னெடுக்க வில்லை என்றால், லோக்பவன் தலைமை தாங்கி முன்னின்று நடத்தும்' என்று பேசியதை, 'இது த.வெ.க., அரசின் கையாலாகாத்தனம்' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சித்தது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், கொதிப்படைந்த அமைச்சர் நிர்மல்குமார், 'லோக் பவனில் என்ன வேலை இருக்கிறதோ அதை செய்தால் மட்டும் போதும்' என, கவர்னரை விமர்சித்துஉள்ளார்.
முயற்சி எடுக்கும்
மதுரையில் நேற்று முன்தினம் தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.வி.அர்லேக்கர் பங்கேற்றார். இதற்காக விமான நிலையத்தில் இருந்து ரிங் ரோடு வழியாக வைகை கரையோரம் வந்தார்.
இதுகுறித்து, நிகழ்ச்சியில் பேசிய கவர்னர், 'நான் வந்து கொண்டிருக்கும் போது, 'இது வைகையாறு' என, என் உதவியாளர் காட்டினார். 'அதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஆறு உள்ளது; நீர் எங்கே? ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, நான் அவரிடம் சொன்னேன்.
'மதுரை இளைஞர்கள் வைகையை சுத்தப்படுத்துவதை இலக்காக வைத்து முயற்சிக்க வேண்டும். ஆற்றில் தண்ணீர் வந்தால், அந்த கரையில் நாகரீக வளர்ச்சி ஏற்படும். யாராவது அதற்கு முயற்சிக்க வேண்டும்.
'இல்லை என்றால், 'லோக்பவன்' முயற்சி எடுக்கும். இதுவும் தேசப்பற்று தான். வைகையாறு மட்டுமல்ல, இளைஞர்கள் சக்தியால் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வரமுடியும்' என்றார்.
இதை தொடர்ந்து, அவர் சர்க்கியூட் ஹவுஸிற்கு சென்று ஓய்வெடுத்தார். அவரை மரியாதை நிமித்தமாக கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் சந்தித்தனர். ஆனால், கலெக்டரிடம் வைகையாறு சீரமைப்பது குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் கவர்னர் ஆய்வு நடத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதன் அடிப்படையில் அறிக்கை விட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, 'கவர்னரின் இந்த அசட்டு துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம். 'மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை தாரை வார்க்காமல், கவர்னர் ஆய்வு செய்யும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்தார்.
இதனால், 'டென்ஷன்' ஆன த.வெ.க., தலைமை, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மூலம் இரவில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட செய்தது. அதில், 'மதுரை வந்த கவர்னரை, மரியாதை நிமித்தமாக கலெக்டர், கமிஷனர், எஸ்.பி., சந்தித்தனர்' என்று, விளக்கம் அளிக்கப்பட்டது.
தேவை இல்லாதது
இந்நிலையில், மதுரையில் நேற்று அமைச்சர் நிர்மல்குமாரிடம், கவர்னர் ஆய்வு குறித்து நிருபர்கள் கேட்டபோது, ''கவர்னர் மாநில நிர்வாகத்தில் தலையிடுவது தேவை இல்லாதது. லோக் பவனில் என்ன வேலை இருக்கிறதோ அதை செய்தால் மட்டும் போதும்.
''வரும் காலங்களில் முதல்வர், அமைச்சர்களின் அனுமதியின்றி அதிகாரிகள் கவர்னரின் ஆய்வுக்கு செல்ல வேண்டியதில்லை,'' என, தெரிவித்தார்.
திராவிட மாடல் அமைச்சரை போல..
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நிர்மல் குமார், நடந்தது என்ன என்று உண்மையை ஆராயாமல், திராவிட மாடல் அமைச்சர்களைப் போல அவசரப்பட்டு கவர்னர் மீது குற்றம் சாட்டியது துரதிஷ்டவசமானது.
