ADDED : ஆக 18, 2025 04:05 AM

'தர்மபுரி மாவட்ட மக்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக, அவர்களை பழிவாங்குவதும், அவர்கள் மீது வன்மத்தை காட்டுவதும் நியாயமல்ல' என, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட, 'அன்புமணி அறிக்கை விரக்தியின் உச்சம்' என பதில் அளித்துள்ளார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
இருவரும் மாறி மாறி வெளியிட்ட அறிக்கைகள் இங்கே: பா.ம.க., தலைவர் அன்புமணி முதல்வர் ஸ்டாலின் அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பல மாவட்டங்களுக்கு செல்லும் போதெல்லாம், 'எனக்கு ஓட்டளித்த மக்கள் வருந்தாத அளவிற்கும், ஓட்டளித்தவர்கள் தவறு செய்துவிட்டோமோ' என வருந்தும் அளவிற்கும் என் பணி இருக்கும் என வசனம் பேசி வருகிறார். இந்த வசனம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் அது உண்மையில்லை.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தர்மபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வீழ்த்தப்பட்டதற்கு, பழிவாங்கும் வகையில் தான், தர்மபுரி மாவட்டத்தை முதல்வர் புறக்கணித்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன், தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, 'தமிழகத்தில் எல்லா மாவட்டங்களையும் சமமாக நடத்துகிறேன்' என கூறியிருந்தார்.
ஆனால், தர்மபுரி மீது வன்மம் கொண்டு, அங்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தாமல், முடக்கி வைத்திருப்பதை, அம்மாவட்டத்தில் உள்ள மக்கள் நன்றாக அறிவர். மாவட்டத்தில் நிலவும் வறட்சியும், வறுமையும் தான், அதற்கு சாட்சி. அதனால் தான் தர்மபுரி மாவட்ட மக்கள், வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண, தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மையை வளர்க்கும் வகையில், தர்மபுரி மற்றும் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த, அரசு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை.
தர்மபுரியில் கடந்த ஆண்டு மார்ச் 11ல் நடந்த அரசு விழாவில் முதல்வர் பேசும் போது, 'தர்மபுரி - -மொரப்பூர் ரயில் பாதை அமைக்க, நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கி விட்டது' என்றார்.
அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஒரு கைப்பிடி மண் கூட, ரயில்வே திட்டத்துக்காக இதுவரை கையகப்படுத்தப்படவில்லை. இது தான் தர்மபுரி மீதான தி.மு.க., அரசின் பாசம். தர்மபுரி மாவட்ட மக்கள், தங்களுக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக, அவர்களை பழிவாங்குவதும், அவர்கள் மீது வன்மத்தை காட்டுவதும் நியாயமல்ல.
அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க.,
'கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தர்மபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வீழ்த்தப்பட்டதற்கு, பழிவாங்கும் வகையில் தான், தர்மபுரி மாவட்டத்தை முதல்வர் புறக்கணித்து வருகிறார்' என அன்புமணி தெரிவித்துள்ளார். சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 100 சதவீத வெற்றியை தி.மு.க., பெற்றதில் இருந்தே, அவர் சொல்வது பொய் என்பது ஊருக்கே தெரியும். சொந்த கட்சியில் தனக்கு ஓர் இடமில்லாமல் போனதால் ஏற்பட்ட விரக்தியில், தந்தையுடன் மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார் அன்புமணி. அந்த விரக்தி தான் அவருடைய அறிக்கை. தர்மபுரியை சம தர்மபுரியாகத்தான் தி.மு.க., அரசு நடத்துகிறது.
தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தில், இதுவரை 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்களில் கூட, தமிழக அரசை குறை சொல்லும் அன்புமணி, இந்த விஷயத்தில் மோடி அரசை ஏன் குற்றம் சொல்லவில்லை?
அவர் எம்.பி.,யாக பணியாற்றிய ஆறு ஆண்டுகளில், 304 நாட்கள் நடந்த சபை நிகழ்வுகளில், 92 நாட்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய வருகை 30 சதவீதம் தான்.
தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை பொறுத்தவரை, காவிரி வடிநிலப் பகுதியில் இருந்து, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாசன பரப்பை தவிர, புதிதாக பாசன பரப்பை, காவிரி வடிநிலத்தில் உருவாக்க இயலாது என, காவிரி நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் கூறியுள்ளது. காவிரி வடிநிலத்தின் உபரி நீரை, பிற வடிநிலத்திற்கு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு கிடைத்த பின்னரே, காவிரியில் நீரேற்று திட்டங்கள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இயலும்.
'சிப்காட்' தொழில் பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டு, ஆரம்பகட்ட பணிகள் 12.39 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளன. ஏழு தொழில் நிறுவனங்களுக்கு, இட ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு உள்ளது.
இனியாவது, அரைவேக்காட்டுத்தனமான அறிக்கை விடுவதை, அன்புமணி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
- நமது நிருபர் -