'டில்லி உஷ்ஷ்ஷ்...!' ஆர்வம் காட்டாத தமிழக எம்.பி.,க்கள்!
'டில்லி உஷ்ஷ்ஷ்...!' ஆர்வம் காட்டாத தமிழக எம்.பி.,க்கள்!
ADDED : ஜூலை 07, 2024 12:25 AM

நடந்து முடிந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பல விஷயங்களை பார்க்க முடிந்தது. தி.மு.க., - எம்.பி.,க்கள் பதவி ஏற்கையில் கோஷம் எழுப்பியது; லோக்சபாவின் மாண்பைக் கெடுக்கும் வகையில், சக எம்.பி.,க்களை ராகுல் உசுப்பி விட்டது; மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசனின் செங்கோல் குறித்த பேச்சு என, சொல்லியபடியே போகலாம்.
தி.மு.க., - எம்.பி.,க்கள் பா.ஜ., அரசை குறை கூறுவதில் குறியாக இருக்க, தமிழகத்தின் முன்னாள் எம்.பி.,க்களோ வேறு விஷயத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழக காங்கிரசை சேர்ந்த முன்னாள் எம்.பி.,க்கள் சிலர், மனுக்களோடு மத்திய அமைச்சர்களை சந்தித்தனர்.
தமிழகத்திற்கான திட்டங்களை விரைவுபடுத்துவது, சென்னை விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்துவது என, இந்த முன்னாள் எம்.பி.,க்கள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து, மனு அளித்துள்ளனர். 'முன்னாள் எம்.பி.,க்களாக இருந்தாலும், தமிழக மக்கள் பிரச்னைகளில் ஆர்வம் காட்டுகின்றனரே' என, மத்திய அமைச்சர்களே ஆச்சரியப்பட்டனர்.
'நாங்கள் இப்போது எம்.பி.,க்கள் கிடையாது; இருந்தாலும், தமிழக மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால், இப்போதைய எம்.பி.,க்கள் கட்சி தலைவர்களுக்கு ஜால்ரா அடிப்பதிலேயே குறியாக உள்ளனர். 40 எம்.பி.,க்கள் மக்களின் நலத்தில் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
'கடந்த பார்லிமென்ட்டிலேயே இதை நாங்கள் பார்த்து விட்டோம். எனவே, எப்போது டில்லி வந்தாலும், மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழக மக்களின் நலம் குறித்து மனு அளித்து வருகிறோம்...' என்கிறார், முன்னாள் எம்.பி., ஒருவர்.