ADDED : செப் 22, 2024 01:33 AM

புதுடில்லி: நாடு முழுதும் ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தான், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம். இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அமைச்சரவை.
எதிர்க்கட்சிகளும், சில மாநில கட்சிகளும் இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பிரச்னையை ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டத்தை அமல்படுத்த ஏன் மோடி முயற்சிக்கிறார் என்பதுதான் கேள்வி.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு சீனியர் அமைச்சர், '-இந்த திட்டம் வந்தால் நாட்டிற்கும், கட்சிகளுக்கும் நல்லது; தேர்தல் செலவுகள் குறையும். அனைத்து அமைச்சர்களின் ஒருமித்த ஆதரவுடன்தான், இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்த்தாலும், நடப்பது நடக்கட்டும். ஒரு கை பார்த்து விடலாம் என பிரதமர் கூறினார். மேலும் அவர் எதை குறித்தும் கவலைப்படவில்லை. தைரியமாக களத்தில் இறங்கியுள்ளார்...' என்றார்.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்த திட்டத்தை எப்படி அமல்படுத்தலாம் என்பதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
ராணுவ அமைச்சரும், சீனியர் பா.ஜ., தலைவருமான ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி தலைவர்களுடன் நெருங்கிப் பழகக் கூடியவர். ஒரே நாடு; ஒரே தேர்தல் விஷயத்தில், மத்திய அரசு சார்பாக இவர்தான் எதிர்க்கட்சிகளுடன் பேசி, ஒப்புதல் பெற முயற்சிக்கப் போகிறாராம்.
'பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, எப்படி நிறைவேற்றப்பட்டதோ, அப்படித்தான் இந்த ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டமும்' என பெருமை பேசுகின்றனர், பா.ஜ.,வினர்.