sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!

/

தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!

தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!

தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!

2


UPDATED : அக் 02, 2025 09:16 AM

ADDED : அக் 02, 2025 09:01 AM

Google News

2

UPDATED : அக் 02, 2025 09:16 AM ADDED : அக் 02, 2025 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசனை திரவியமோ, வாடாமல்லி வாசனையோ அந்திப்பொழுது வரையே தாக்குப்பிடிக்கும். வாசிப்பு திறன் இருந்தால் அது நம் வாழ்க்கை முழுவதும் துணையாய் நிற்கும். அத்திறன்பெற்ற வாசகர்களின் விருப்பம் கட்டுரைகள், கருத்துப் பெட்டகங்கள், புத்தகங்களைக் காட்டிலும் தினசரி நாளிதழ் மீதே தீராத நாட்டம் கொண்டிருக்கும். அவர்களை பெரும்பான்மையாகக் கொண்டதால்தான் தினமலர் இன்று, பவள விழாவைத் தாண்டி நின்று சிறப்பு காட்டி கொண்டாடுகிறது. சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள், நடுத்தர வயதினர், பெரிய வயதினர், முதிய வயதினர் என எல்லா தரப்பினரும் ஏற்கும் தினமலர் பவள விழா காலத்தில் தொண்ணுாறு தாண்டியவர்களை தேடினால், நுாறை தாண்டி நாங்கள் இருக்கிறோம் என எண்ணற்ற வாசகர்கள் ஆர்வமுடன் வந்து நம்முன் வரிசை கட்டுகிறார்கள்.அவர்களின் விருப்பம் தான் என்ன, தினமலர் விரும்பி வாசிப்பது ஏன்? அவர்களே அளித்த பேட்டி

நாளும் பொழுதும் இனிதாய் கழிகிறது


ர.சீனியம்மாள் 101, அண்ணாநகர், மதுரை.

சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டி. மதுரை, அண்ணாநகர், அன்புநகர், ராஜராஜன் தெருவில் உள்ள மகள் வீட்டில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறார். மகள் வழி பேரன்களின் குடும்பங்களுடன் வசிக்கிறார். இவர், கூட்டுக் குடும்பத்தின் 'அன்னபூரணி' என, சிலாகிக்கிறார் மருமகன். அந்தளவுக்கு, வீட்டினரின் சமையல் தேவையை கவனித்து வந்த சீனியம்மாள், இப்போதும் காய்கறிகளை நறுக்குவது உட்பட அவரால் முடிந்ததை செய்து தருகிறார். தனது தேவையை தானே கவனித்துக் கொள்வது மட்டுமின்றி, எந்நேரமும் ஏதாவது அவரளவுக்கு முடிந்த வேலையை செய்வதே அவரது வாழ்நாள் சாதனைக்கு காரணமாக உள்ளது. காது கேட்கும் திறன் சற்று குறைந்துள்ளதே தவிர, பார்வைத் திறனோ, படிக்கும் திறனோ குறையவே இல்லை. இதனால் தினமலர் படிக்காத நாளில்லை என்று பெருமிதம் கொள்ளும் அவர் கூறியதாவது:

எனது மகள் வீட்டிற்கு வந்தபின்பே தினமலர் இதழை தொடர்ந்து வாசிக்கிறேன். மருமகன் ரவிச்சந்திரன்தான் தினமலர் வாசிக்க காரணமாக இருந்தார். தினமும் நான்தான் முதலில் படிப்பேன். இதில் ஏராளமான செய்திகள் வருகின்றன. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது என்பதால் அதற்கு அடிமை போலாகிவிட்டேன். அதில் வரும் உண்மை தகவல்கள், தெளிவான படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும் என்பதால் தொடர்ந்து படிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. தினமும் ராசிபலன், ஆன்மிக பகுதிகளை விடாமல் படித்துவிடுவேன். தேவையோ தேவையில்லையோ ஒருசெய்தியையும் விடமாட்டேன். அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளதால் கோயில் விழாக்கள், பள்ளி, கல்லுாரி செய்திகள், அரசியல், சினிமா, மார்க்கெட் நிலவரம் என எல்லாவற்றையும் படிப்பேன்.

இதழுடன் வரும் இலவச இணைப்புகளிலும் ஆன்மிக மலர், சிறுவர் மலரையும் விரும்புவேன். பத்திரிகையை படிப்பதால் தினசரி வாழ்க்கை தகவல்களை தெரிந்து கொள்வதுடன், ஒவ்வொரு நாளும் இனிதாக கழிகிறது. காலையில் டீ, காபி எதிர்பார்ப்பது போல, தினமலர் இதழும் வேண்டும் என எதிர்பார்ப்பேன். 'அது வந்துவிட்டதா' என வீட்டுக்கு வெளியே வந்து பார்ப்பேன். தாமதமானால் வாசலில் அமர்ந்து தினமலர் வந்தபின் வீட்டுக்குள் எடுத்து வந்து படிப்பேன். செய்திகள், தங்கம் உட்பட பொருட்களின் விலையில் மாற்றங்கள் குறித்து வீட்டினருடன் கலந்துரையாடுவேன். எனது பேத்திகளுக்கும், சிறுவர்களுக்கான தகவல்களை படித்து தெரிவிப்பேன். பவளவிழா தினமலர் பலதலைமுறைகள் காணும் பேணும் இதழாக வளர வாழ்த்துகள்.

Image 1476909

பள்ளி தோறும் நிகழ்ச்சி


என்.கே.கல்யாணராமன், வயது 102, கொரட்டூர், சென்னை

சென்னை, கொரட்டூரைச் சேர்ந்தவர் என்.கே. கல்யாணராமன், 102. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி. கடந்த 15 ஆண்டுகளாக தினமலர் தொடர்ந்து வாசிக்கிறார். நகரில் நடைபெறும் நிகழ்வுகள் மட்டுமல்லாமல் தேசிய, சர்வதேச தகவல்களையும் அறிந்து கொள்ள விரும்புபவர். தினமலர் உடன், அவர் பிற இதழ்களையும் வாசித்து வருகிறார்.

கல்யாணராமன் கூறுகையில், 'வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் ஆன்மிக மலர், மிகவும் பயனுள்ளது. எந்தக் கோயில்களுக்குச் சென்றால் என்ன நன்மை என குறிப்பிட்டு விளக்குவது சிறப்பாக உள்ளது. சிறுவர் மலர், மாணவ, மாணவியர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இதை வாசிக்க பள்ளிகளில் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இதன்வாயிலாக நல்ஒழுக்கம், பழக்க வழக்கம், பரந்த விழிப்புணர்வு கிடைக்கும். அவர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்கும். பொதுவாக தினமலர், அரசியல், உடல்நலம், நிதி தொடர்பான தகவல்களை சரியாக தருகிறது. விளையாட்டு, மாநில, தேசிய, சர்வதேச செய்திகள் என அனைத்தையும் உள்ளடக்கியிருப்பது அருமை. மாணவர்கள் சிறுவர் மலர் வாசிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த, வாரம் ஒரு நாள் பள்ளிகளில் தினமலர் சார்பில் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தலாம்.

மடிப்பு கலையாத தினமலர் படிப்பேன்


சுந்தரராஜன் வயது 103, திருப்பாலை, மதுரை:

மதுரையைச் சேர்ந்த இவர் பிறந்தது 1922, செப்.,13ல். ரயில்வேயில் புக்கிங் கிளார்க்காக மாதம் ரூ.6 சம்பளத்திற்கு சேர்ந்தவர். மானாமதுரை, கொல்லம், பழநி, மதுரை நகரங்களில் பணியாற்றி, 1988ல் ரூ.666 சம்பளத்துடன் ஓய்வு பெற்றார். முப்பதாண்டு தினமலர் இதழின் தீவிர வாசகரான இவர், தனக்கு தேவையான எல்லா தகவலும் தினமலரே தந்துவிடுவதால் வேறெந்த இதழையும் படிப்பதில்லை என்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 98 வயது வரை மருந்து மாத்திரையே எடுத்துக் கொள்ளாதவர், வீட்டில் விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுவதால் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்.

தினமும் இருமுறை உணவு, காபி எடுத்துக் கொள்ளும் இவர் சுத்த சைவம். உணவு எடுத்துக் கொள்வது, துணிகளை சலவை செய்வது உட்பட தனது பணிகளை தானே கவனித்துக் கொள்வது இவரது வழக்கம். இந்த வயதிலும் காது கேட்கும் திறன் கொஞ்சம் குறைந்தாலும், கண்ணாடி அணியாமல் தினமலரை முழுவதும் படித்த பின்பே தனது அன்றாட பணிகளை கவனிப்பாராம்.

அவர் கூறியதாவது: நான் மதுரை மேலஆவணி மூலவீதியைச் சேர்ந்தவன். ரயில்வேயில் புக்கிங் கிளார்க் ஆக 38 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளேன். முப்பது ஆண்டு தினமலர் வாசகன் நான். தினமும் காலையில் 4 மணிக்கே எழும்பினாலும் தினமலர் படித்தபின்பே பணிகளை துவங்குவேன். எங்கள் வீட்டில் முதலில் நான்தான் படிப்பேன். எனக்கு முன்னரே வேறு யாரும் தினமலர் இதழை எடுத்து படித்தாலும் பிடிக்காது. தினமலர் மடிப்பு கலையாமல் எனக்கு வேண்டும் என நினைப்பேன். படித்து முடித்தபின் அதை பத்திரமாக மடித்து வைப்பதும் எனது பழக்கம். தினமும் தாமதமின்றி காலை 6:00 மணிக்கே படித்தாக வேண்டும் என்ற ஆசையில் கடையில் வாங்கி வரச்செய்து படிப்பேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

முப்பதாண்டுகளுக்கு முன் ஆங்கில இதழ் ஒன்றை படித்து வந்தேன். தமிழில் தினமலர் படிக்கத் துவங்கிய பின் வேறெந்த இதழையும் விரும்பி படிப்பதில்லை. காரணம், இதில் அனைத்து தகவல்களும், உள்ளது உள்ளபடியே வருவதால் எனக்கு தேவையானது கிடைத்து விடுகிறது. தினமலர் இதழ் செய்திகளும், படங்களும் வெளிநாட்டு ஆங்கில இதழ்களைப் போல அத்தனை சிறப்புடன் உள்ளது.

இதில் கோயில், ஆன்மிகம், ஜோதிடம் போன்றவற்றை அதிகம் விரும்பி படிப்பேன். கோயில் தொடர்பான படங்களை பார்க்கும்போது நேரில் அந்த இடத்தில் இருக்கும் உணர்வை பெறுகிறேன். மேலும் ஷேர் மார்க்கெட், பொதுவான தகவல்கள், விளையாட்டுச் செய்திகளையும் அதிகம் விரும்பி படிப்பேன். தினமலர் இதழின் தகவல்கள், மொழிநடை சாதாரண வாசகரும் புரியும் வகையில், எளிமையான, வெகுஜன பத்திரிகையாக உள்ளது. பவள விழாவைப் போல இன்னும் பல விழாக்களை தினமலர் கொண்டாட வாழ்த்துகள்.

Image 1476910

அன்று முதல்... இன்று வரை


எம்.ருக்மணி அம்மாள், வயது 102, டிடிகே நகர், மேற்கு தாம்பரம், சென்னை

ருக்மணி அம்மாள், கடந்த 25 வருடங்களாக தினமலர் வாசகராக இருந்து வருகிறார். 25 வருடங்களுக்கு முன் ரயிலில் பயணித்த போது, பக்கத்து சீட்டில் ஒருவர் தினமலர் படித்து முடித்து பக்கத்தில் வைத்திருந்தார். பொழுது போகவேண்டும் என்பதற்காக அவரது பேப்பரை இரவல் வாங்கிப் படித்தார். அப்போது முதலே தினமலர் அவருக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. வீட்டிற்கு வந்ததும் தினமலர் சந்தாதாரர் ஆகி, அன்று முதல் இன்று வரை படித்து வருகிறார்.

இவர் கூறுகையில், ''சென்னையில் தீபாவளி, ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகையின் போது மறுநாள் தினமலர் வராது. அன்று முழுவதும் எதையோ பறிகொடுத்தது போல இருக்கும். ஆன்மிக மலர் ரொம்பவும் பிடிக்கும். ஆன்மிக விஷயங்களை தொகுத்து சற்று பெரிய எழுத்தில் வயதானவர்களுக்கு என்றே ஒரு புத்தகம் வந்தால் நன்றாக இருக்கும், என்றார்.

மக்கள் பிரச்னையை கையில் எடுத்தால்...


மீனாட்சி கிருஷ்ணமூர்த்தி. வயது 100. திருவான்மியூர்,சென்னை.

இவர் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்தி ஆசிரியை. ஆனாலும் மாணவர்களுக்கு இந்தியுடன் கணிதம், விஞ்ஞானம், வரலாறு, பூகோளம் என, பிற பாடங்களையும் எளிய முறையில் புரியும்படி நடத்தி வந்தார். அப்போது ஏழை, எளியவர்களின் குழந்தைகள் படிக்க முடியாமல் சிரமப்படுவதைக் கண்ட இவர், இலவசமாக ட்யூஷன் நடத்தி கல்வி போதித்தார். பணி ஓய்வுக்குப்பிறகும் சுறு சுறுப்பாக இயங்கி வரும் இவர், கற்று கொடுத்தது போலவே கற்று கொள்ளவும் ஆர்வம் கொண்டார். 50 வயதிலேயே ஆரோக்கியமும், ஆயுளும் முடிந்துபோனதாக பலரும் தற்போது புலம்புவதை கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் இவரோ, தனது 75வது வயதிலும் தன்னம்பிக்கை தளராமல் பாரா கிளைடிங்கில் பறந்து காட்டினார். 80 வது வயதில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் கையாளக் கற்றுக்கொண்டார். தன் பிள்ளைகள், மருமகள், பேரன், பேத்திகள் பல மொழிகள் கற்றிட ஊக்கம் அளித்த இவர், எப்போதும் தன்னை மிகுந்த உற்சாகத்துடன் வைத்திருக்க விரும்புபவர். ராம நாமம் பல ஆண்டுகள் எழுதி வரும் மீனாட்சி கிருஷ்ணமூர்த்தி, விரைவில் ஒரு கோடி இலக்கை அடைய உள்ளார்.

இவர் கூறியதாவது: எனது தோழி மூலமாகவே தினமலர் எனக்கு அறிமுகம் ஆனது. கடந்த 23 வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரு பிரச்னையை கையில் எடுத்தால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை, அதற்கு தீர்வு காணும் வரை தினமலர் தொடர்ந்து எழுதும். இந்த பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். மாணவர்களுக்காக வெளியாகி வரும் பட்டம் இணைப்பு, எதிர்கால சமூகத்தை பண்படுத்துகிறது. பல வருடங்களாக நான் ஆசிரியையாக பணியாற்றியபோது தினமலர் நாளிதழில் வரும் மாணவர்களுக்கான கேள்வி-பதில் பகுதியை 'கட்' செய்து சேகரித்து வைத்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு வழங்குவேன்; சொல்லித்தருவேன்.

மத வேறுபாடில்லாமல் அனைத்து மத செய்திகளையும் வெளியிடும் ஆன்மிக மலர் மற்றும் வார மலர், சிறுவர் மலர், அன்றாடம் வெளியாகும் இது உங்கள் இடம் எனக்கு மிகவும் பிடிக்கும். சமூகத்தின் இன்றைய தேவை மாணவ, மாணவியரை போதையின் பாதையில் சிக்கிவிடாமல் பாதுகாப்பதே. அதை தினமலர் ஒரு இயக்கமாக பள்ளிகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது இவரது விருப்பம்.

Image 1476911

காலத்துக்கேற்ப மாற்றம்


ஏ.வைத்தியநாதன், வயது 101, குரோம்பேட்டை, சென்னை

நீண்ட காலமாக ஆங்கில நாளிதழ் மட்டும் வாசித்து வந்த இவர், தனது மனைவி வேதம் சிபாரிசால் தினமலர் வாசிக்கத் துவங்கினார். 'வேதம் சொல்வதே இனி தனக்கு வேதம்' என்று முடிவு செய்ததாலோ என்னவோ, தினமலர் வாங்க துவங்கினார். சில நாட்களிலேயே தினமலரின் தீவிர வாசகரும் ஆகிவிட்டார். அன்று முதல் இன்று வரை 25 ஆண்டுகளாக தினமலர் வாசித்து வருகிறார்.

இவர் கூறுகையில், 'குறுக்கெழுத்துப் போட்டி மிக மிக பிடிக்கும். விளையாட்டுச் செய்திகளை அதிகம் வாசிப்பேன். நாட்டு நடப்பை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. எனது வாழ்நாளில் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த தலைமுறைக்கு அறிவுரை சொன்னால் பிடிக்காது. ஆனால் அவர்கள் நிறைய வாசிக்க வேண்டாமென விரும்புகிறேன். சிறுவர் மலரில் வரும் வாசகர் கடிதங்களை விரும்பி வாசிப்பேன்.வரலாறு படைக்க

வாசித்தல் அவசியம்


சேஷாத்ரி ஐயங்கார், வயது 101, ஸ்ரீரங்கம், திருச்சி.

'வரலாறு படிக்க வேண்டும்; வரலாறு படைக்க வேண்டும். அதற்கு தினமலர் உதவுகிறது' என்கிறார், 101 வயது வரலாற்று ஆசிரியர், திருச்சி, ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் சேஷாத்ரி ஐயங்கார். கடந்த, 1924, பிப். 18ல் பிறந்த இவர், புதுக்கோட்டையில் உள்ள கல்லுாரியில் பி.ஏ., பி.டி., முடித்தவர். வரலாற்று ஆசிரியர். அரியலுார், ஜெயங்கொண்டம், பெருவளநல்லுார் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்த இவர், புத்தகங்கள், நாளிதழ்கள் படிப்பதில் ஆகச்சிறந்த ஆர்வம் கொண்டவர். நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க வேண்டும், அதுவும் ஆழமாக வாசிக்க வேண்டும் என, பள்ளிப்பாடம் தாண்டி மாணவர்களை ஊக்குவித்தவர்.

சேஷாத்ரி ஐயங்கார் கூறியதாவது: கடந்த 1982ல் பணி ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனாலும் நாளிதழ், புத்தகம் வாசிப்பு இன்னும் தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக 'தினமலர்' வாசித்து வருகிறேன். தினமும் காலை 6 மணிக்கு எழுந்தவுடன் அன்றாட கடமைகளை முடித்து விட்டு, ஒரு கப் காபியுடன் அன்றைய நாள் இனிதாகத் துவங்கும். ஒரு மணி நேரம், 'தினமலர்' நாளிதழை, முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அனைத்து செய்திகளையும் படிப்பேன். பலதரப்பட்ட செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தாலும், அரசியல் செய்திகள் மீது தனி விருப்பம் உண்டு.

காலை 10:30 மணிக்கு உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுப்பேன். மதிய உணவுக்கு பின் மீண்டும் ஓய்வு. மாலை 5:00 மணியிலிருந்து புத்தகங்களை வாசிப்பேன். இரவு 7:00 மணியிலிருந்து 8:00 மணி வரை தொலைக்காட்சி பார்ப்பேன். தற்போதைய கால கட்டத்தில் மொபைல் போன் வந்து விட்ட பின், பலரின் கவனம் அதில் சென்று விட்டது கவலை அளிக்கிறது. நாளிதழ், புத்தகங்கள் வாசித்தால் அறிவு விசாலமாகும்.

Image 1476912

பேரக்குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தருகிறேன்


மீனாட்சி சுப்ரமணியம், வயது 100, கணபதி, கோவை

ஊன்றுகோலுடன், சில சமயம் அதுவும் இல்லாமல், முதுமை கம்பீரத்துடன் நடக்கிறார். தன் வேலையை தானே செய்து கொள்கிறார். தினமும் காலை 6.30க்கு எழுந்ததும் துவங்கி விடுகிறது இவரது பணி. கடவுள் வழிபாடு, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகரி ஸ்லோகங்கள் சொல்லிய பின் ஒரு மணிநேரம் 'தினமலர்' வாசிப்பு, என அன்றாட பணிகளில் அசத்துகிறார்.

மீனாட்சி சுப்ரமணியம் கூறியதாவது: 30 ஆண்டுகளாக 'தினமலர்' வாசித்து வருகிறேன். நாட்டு நடப்பு அறிந்து கொள்ள முடிகிறது. என் பேரக்குழந்தைகள் தமிழ் வாசிக்க 'தினமலர்' வாயிலாக கற்றுத்தருகிறேன். தொலைக்காட்சிகளில் செய்தி பார்ப்பதற்கும், நாளிதழ் வாசித்து தெரிந்துக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நாளிதழில் செய்தி, சம்பவங்கள் விரிவாக அலசப்படுகிறது.

அரசியல் செய்திகள் பிடிக்கும். எனக்கு கொஞ்சம் மறதி இருப்பினும் வாசிப்பதை தொடர்கிறேன். அதுவே, பெரிய பலம்தான். வாரமலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர் புத்தகங்களை முழுவதுமாக படித்து விடுவேன். செய்திகளுக்கு மட்டுமல்லாமல் அறிவுப்பூர்வமான விஷயங்கள், சமூகத்துக்கு தேவையான விஷயங்களை 'தினமலர்' சொல்வதால் பிடித்து விட்டது. இன்றைய இளைஞர்கள் நாளிதழ் வாசித்தால் மட்டுமே விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us