தற்காலிக ஊழியர்கள் நீக்கம்: தமிழ்நாடு இல்லத்தில் பரபரப்பு
தற்காலிக ஊழியர்கள் நீக்கம்: தமிழ்நாடு இல்லத்தில் பரபரப்பு
UPDATED : செப் 27, 2024 05:17 AM
ADDED : செப் 27, 2024 02:19 AM

டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த தற்காலிக பணியாளர்களை திடீரென இனிமேல் பணிக்கு வர வேண்டாம் என, வாய் மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
தமிழக அரசின் முகமாக டில்லியில் விளங்குவது தமிழ்நாடு இல்லம். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, முதல்வரின் கீழ் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இது இயங்கி வருகிறது.
தற்போது இங்கு புதிய பிரச்னை வெடித்துள்ளது. இங்கு புதிய இல்லம் பழைய இல்லம் என்று இரண்டு தங்குமிடங்கள் உள்ளன. இவற்றில், பழைய இல்லத்தை இடித்துவிட்டு அதற்கு பதிலாக அங்கு புதிய பிரமாண்ட கட்டடம் கட்டும் பணிகள் துவங்கவுள்ளது. இதற்காக அந்த கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில், அந்த பழைய இல்லத்தில் பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்கள் பலர், வேலை பார்த்து வருகின்றனர். சுத்தம் செய்வது, ரூம் பாய், சமையல் உதவியாளர் என பல்வேறு பணிகளை இவர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இவர்களில் சிலர் 10 முதல் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்தான் இவர்களில் 10 பேர், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் பணிக்கு வர வேண்டாமென்று நிறுத்தப்பட்டுவிட்டனர்.
வெறும் வாய் மொழியாக, 'கட்டடம் இடிக்கப்படுவதால் இனி உங்களுக்கு வேலை இல்லை' என, அதிகாரிகள் கூறிவிட்டனர்.
திடீரென்று வேலை இழந்துவிட்டதால், தங்கள் குடும்பங்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து அவர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு மீண்டும் வேலை தந்து உதவ வேண்டும் என, இவர்கள் முறையிட்டபோது, 'தேவைப்பட்டால் புதிய இல்லத்தில் பணிக்கு சேர்ந்து கொள்ளுங்கள்' என்று தகவல் தரப்பட்டுள்ளது.
'அங்கு ஒப்பந்த அடிப்படையில்தான் பணி. அரசின் கீழ் தற்காலிக பணியில் இருந்து வந்த நிலையில், அங்கு சென்றால் இவர்களது நிலை சிக்கல் ஆகும். டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இங்குதான் தங்க உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த தற்காலிக ஊழியர்களின் பணிநீக்கம் விவகாரம் புகைந்தபடி உள்ளதால், ஏதாவது தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு டில்லி தமிழ்நாடு இல்ல வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

