மாவட்ட தலைவர்கள்- பொறுப்பாளர்கள் மோதல் தமிழக காங்., சீரமைப்பு பணிகளில் தொய்வு
மாவட்ட தலைவர்கள்- பொறுப்பாளர்கள் மோதல் தமிழக காங்., சீரமைப்பு பணிகளில் தொய்வு
UPDATED : நவ 28, 2024 04:45 AM
ADDED : நவ 27, 2024 08:32 PM

'மாவட்ட தலைவர்களை மாற்றும் போது, நாங்கள் எதற்கு வீண் செலவு செய்து, நிர்வாகிகள் கூட்டங்களை நடத்த வேண்டும்' என, மாவட்ட பொறுப்பாளர்களிடம், மாவட்ட தலைவர்கள் கேட்பதால், தமிழக காங்கிரஸ் மறுசீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில், காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்; ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்பது, காங்கிரஸ் தொண்டர்களின் வெகுகால விருப்பம்.
புறக்கணிப்பு
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மனநிலை அடிப்படையில், முதற்கட்டமாக, காங்கிரசை மறு சீரமைக்கும் பணிகளை, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை துவக்கி உள்ளார்.
அதாவது, கிராம அளவில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த முற்பட்டுள்ளார்.
கிராமங்களில் இருந்து மேல்மட்டம் வரை, கட்சி கட்டமைப்பை சீரமைக்க, அனைத்து மாவட்டங்களுக்கும், சமீபத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில், ஒரு மாவட்டத்திற்கு நான்கு பேர் வீதம், 77 மாவட்டங்களுக்கு, மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சி சீரமைப்புக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சில மாவட்ட தலைவர்களிடம் பேச, கட்சியில் தலைமையில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அந்த அழைப்பை புறக்கணித்து உள்ளனர்.
ஆனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில், பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மற்ற மாவட்டங்களில் குறிப்பாக, சென்னையில் ஒரு சட்டசபை தொகுதியில் கூட, பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்னமும் நடத்தப்படவில்லை.
இதனால், கட்சி சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
டில்லி ஒப்புதல்
இதுகுறித்து, மாவட்ட தலைவர்கள் கூறியதாவது:
எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், கட்சியை வலுப்படுத்த மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விரும்புகிறார்.
மாவட்ட தலைவர்களை மாற்றி விட்டு, புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்கவும், டில்லியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார். கோஷ்டி தலைவர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட முடியவில்லை.
கடைசி அஸ்திரமாக, கிராம அளவில் இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் ஆகியோரை கொண்ட புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும், கிராம அளவில் கட்சி அமைப்பை ஏற்படுத்தி, வார்டு மற்றும் ஓட்டுச்சாவடிகளில் தகுதியான நபர்களை நியமிக்கும் பணியும் துவக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தலைவர்களோ, 'எங்களை மாற்றுவது என முடிவெடுத்த பின், நாங்கள் எதற்கு வீண்செலவு செய்து கட்சியில் மறுசீரமைப்பு பணிகளையும், கட்சி கூட்டங்களையும் நடத்த வேண்டும்?' என்ற கேள்வியை, மாவட்ட பொறுப்பாளர்களிடம் எழுப்புகின்றனர்.
புறக்கணிப்பு
அத்துடன், பதவியில் நீடிக்க வைத்தால் கட்சி செயல்பாடுகளில் அக்கறை காட்டுவது, இல்லையெனில், த.வெ.க., பக்கம் செல்வது என்ற எண்ணத்தில், சில மாவட்ட தலைவர்கள் உள்ளனர்.
இதனால், அந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்களை கண்டுகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
எந்த மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகள் சரியாக இல்லை என, மாவட்ட பொறுப்பாளர்கள் தரும் அறிக்கை அடிப்படையில், டில்லி மேலிடத்தில் புகார் தெரிவித்து, புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட வைக்கலாம் என, செல்வப்பெருந்தகை திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -