செங்கை பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தால் தீபாவளி ஏமாற்றம்
செங்கை பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தால் தீபாவளி ஏமாற்றம்
ADDED : நவ 02, 2024 12:59 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு, நெய், பால்கோவா ஆகியவை வழங்குவதாக கூறி, கணக்கெடுத்த ஆவின் நிறுவனம், வழங்காமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில், பால் கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன. மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், தங்கள் பகுதி சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
தினசரி பால் கறந்து, சங்கத்திடம் வழங்கி, அதற்கான பணத்தை, நிர்ணய கால அவகாசத்தில் பெறுகின்றனர். தமிழக அரசின் ஆவின் நிறுவனம், இதை செயல்படுத்துகிறது.
இந்நிறுவனம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, செங்கல் பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு, தலா 200 மி.லி., ஆவின் நெய் மற்றும் 200 கிராம் பால்கோவா வழங்கப் படும்.
அவற்றுக்கான பணத்தை, கொள்முதல் பாலுக்கு வழங்கப்படும் தொகையில் பிடித்தம் செய்யப்படும் என்று உறுப்பினர்களிடம் தெரிவித்தது; அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இரண்டு வாரங்களுக்கு முன், அனைத்து சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை விபரங்களையும் பெற்று, தீபாவளிக்கு முன் பொருட்கள் அளிப்பதாக தெரிவித்தது. நேற்று முன்தினம், தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், அவற்றை ஆவின் நிறுவனம் வழங்காமல், உறுப்பினர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து, பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
ஆவின் நிறுவனம், எங்களுக்கு ஆவின் நெய், பால்கோவா வழங்கி, பால் பணத்தில் பிடித்தம் செய்வதாக தெரிவித்தது.
ஒவ்வொரு சங்க உறுப்பினர் எண்ணிக்கையையும் பெற்ற ஆவின் நிர்வாகம், நெய், பால்கோவா வழங்காமல் ஏமாற்றி விட்டது. அதை வழங்க முடியாத நிர்வாகம், இரண்டு வாரங்களுக்கு முன்பே, அதுபற்றி கணக்கெடுத்தது கேலிக்கூத்தாகத் தான் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -