தி.மு.க., - மா.செ.,வை கைது செய்ய நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
தி.மு.க., - மா.செ.,வை கைது செய்ய நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
ADDED : நவ 19, 2025 04:33 AM

சென்னை: 'பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க., மாவட்டச் செயலர் ஜெயபாலனை உடனே அரசு கைது செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் நடந்த தி.மு.க., கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஜெயபாலன், 'உங்கள் ஓட்டுகளை பறிப்பதற்கு துடிக்கிறான் மோடி.
'அவர் இன்னொரு நரகாசுரன். அவனை தீர்த்து கட்டினால் தான், தமிழகம் நன்றாக இருக்கும்' என, பேசியுள்ளார்.
இதற்கு, கண்டனம் தெரிவித்து, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகமே போற்றும் மாபெரும் தலைவர் குறித்து, தி.மு.க., மாவட்டச் செயலர் ஜெயபாலன், கொலை மிரட்டல் விடுத்திருப்பது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.
அதிலும், உடனிருந்த தென்காசி எம்.பி., ராணியும், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ., ராஜாவும், மாவட்டச் செயலரின் கொடூர பேச்சை தடுக்காமல் மவுனம் காத்திருப்பது, ஒட்டுமொத்த தி.மு.க.,வின் வன்முறை போக்கையும், வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது.
இதை தட்டிக்கழிக்க எத்தகைய சாக்குபோக்கை தி.மு.க., கூறினாலும் ஏற்று கொள்ள முடியாது. தி.மு.க., மாவட்டச் செயலர் ஜெயபாலனை, தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

