கோவையில் மோடியை சந்திக்கும் பழனிசாமி; வலுவான கூட்டணி அமைக்க ஆலோசனை
கோவையில் மோடியை சந்திக்கும் பழனிசாமி; வலுவான கூட்டணி அமைக்க ஆலோசனை
UPDATED : நவ 19, 2025 05:02 AM
ADDED : நவ 19, 2025 03:46 AM

சென்னை: கோவையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கோவை கொடிசியா அரங்கில், இன்று நடக்கும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்காக, இன்று பகல் 1:30 மணிக்கு கோவை வரும் மோடியை, விமான நிலையத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்,
த.மா.கா., தலைவர் வாசன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 'பீஹார் வெற்றியால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் பா.ஜ., தொண்டர்களுக்கு புது சக்தி கிடைத்துள்ளது.
பா.ஜ., தொண்டர்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை; அவர்கள் மனது வைத்தால் எதையும் சாதிப்பர்' என்றார்.
பீஹாரை தொடர்ந்து தமிழகம், மேற்கு வங்கத்தில், பா.ஜ., தலைமை கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி வைத்ததால், பீஹாரில் வெற்றி கிடைத்துள்ளது.
எனவே, இதே மாடலில், தமிழகத்திலும் கூட்டணி அமைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமாவளவனின் வி.சி., தவிர, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் நடத்தும் கட்சிகள் என, பட்டியலின கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கோவை வரும் பிரதமர் மோடியை, தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.
அப்போது, கடந்த ஏப்ரல் 11ல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைந்தது முதல் நடந்த அரசியல் நிகழ்வுகள், கூட்டணியை விரிவுப்படுத்த எடுத்து வரும் முயற்சிகள், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சிக்கல்கள் குறித்து எடுத்துரைக்க இருப்பதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, வலுவான கூட்டணி அமைப்பது, எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது, புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர என்ன செய்வது என்பது உள்ளிட்ட, கூட்டணி வியூகங்கள் குறித்து பிரதமர் மோடியிடம், பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை சந்திப்புக்குப் பின், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
உலகம் போற்றும் தலைவர் மோடி:
இந்தியாவில், விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டத்தில், 11 கோடி விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன், 21வது தவணை தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதை கோவையில் இருந்து பிரதமர் துவக்கி வைக்கிறார். இப்படிப்பட்ட செயல்பாடுகளாலேயே, உலகம் முழுவதும் போற்றும் தலைவராக மோடி உள்ளார். 11 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை மக்கள் அறிவர்.
2047க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக வேண்டும் என பாடுபட்டு வருகிறார். பிரதமர் மோடியால், 25 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் வந்துள்ளனர். 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில், தொழில்நுட்ப வளர்ச்சியால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உயர்ந்துள்ளன. புல்லட் ரயில் விடும் அளவுக்கு, இந்திய தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது. நாட்டின் முன்னேற்றத்தையும் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார் பிரதமர். முருகன், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,

