தி.மு.க., கூட்டணியில் ஒரு 'சீட் : 'நடிகர் கமலுக்கு கோவை கிடைக்குமா?
தி.மு.க., கூட்டணியில் ஒரு 'சீட் : 'நடிகர் கமலுக்கு கோவை கிடைக்குமா?
ADDED : பிப் 14, 2024 11:31 PM

மதுரை :சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே கட்சி துவங்கியவர்களில் நடிகர் கமலும் ஒருவர். 2018 பிப்., 21ல் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கினார். 2021ல் சட்டசபை தேர்தலில் ம.நீ.ம., சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வி கண்டன.
கமல் கூட எம்.எல்.ஏ., ஆக முடியவில்லை. 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, 3 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்தது.அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல், உட்கட்சி பூசல் காரணங்களால் இனி தேர்தல்களில் பலமான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே கட்சியை தொடர்ந்து வழிநடத்த முடியும் என கமல் முடிவு செய்தார்.
இதனால் ஆளுங்கட்சியான தி.மு.க.,வுடன் ஆரம்பத்தில் மோதல் போக்கை காட்டியவர், தற்போது ஆதரவு நிலையை எடுத்து உள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலுக்கு தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்புகிறார். தி.மு.க., கூட்டணியில் நடிகர் கமலுக்கு மட்டும் ஒரு சீட் கொடுப்பர் எனத் தெரிகிறது.
இந்நிலையில், கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மண்டல வாரியாக ஆலோசனை நடத்தினார் நடிகர் கமல்.அப்போது மதுரை மண்டல நிர்வாகிகள், கமல் பிறந்த பரமக்குடி உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் சிரிப்பை மட்டும் கமல் பதிலாக
தந்திருக்கிறார்.
தற்போது தி.மு.க., தன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தி வருகிறது. அடுத்தகட்டமாக, ம.நீ.ம.,வுடன் பேச்சு நடத்தக்கூடும் என தெரிகிறது. எதிர்பார்க்கப்படுவது போல, ம.நீ.ம.,வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கும் பட்சத்தில், கோவை தொகுதியை, அக்கட்சி சார்பில் கேட்க முடிவெடுத்துள்ளனர்.அந்த தொகுதியில் ஏற்கனவே, மா.கம்யூ., வென்றுள்ள நிலையில், அக்கட்சி, கோவையை விட்டுக் கொடுக்குமா என தெரியவில்லை.ஒருவேளை, விட்டுக் கொடுக்காத பட்சத்தில், ராமநாதபுரம் தொகுதியில் இருந்து கமல் போட்டியிட வாய்ப்புள்ளது என, அக்கட்சிவட்டாரங்கள் கூறின. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ராமநாதபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அந்த தொகுதியிலும் கமல் கட்சிக்கு சிக்கல் உள்ளது.

