தி.மு.க., தேர்தல் நிதி வசூல்: 'பவர்' நிர்வாகிகள் தாராளம்
தி.மு.க., தேர்தல் நிதி வசூல்: 'பவர்' நிர்வாகிகள் தாராளம்
ADDED : டிச 09, 2024 06:21 AM

மதுரை: தி.மு.க., சார்பில் தேர்தல் நிதி வசூலிக்கும் நடவடிக்கையில் 'பவர்புல்' மாவட்ட நிர்வாகிகள் சொந்த பணத்தை நிதியாக வழங்க தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் எட்டு ஆண்டுகளுக்கு பின், 2026 ல் நடக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., சார்பில் தேர்தல் நிதி வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு சட்டசபை தொகுதிக்கு ரூ.1 கோடி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பகுதி, வட்ட, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மாவட்ட செயலாளர்கள் (மா.செ.,) வசூல் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரிய, தொழில் நகரங்களில் வசூல் பணிகள் துவங்கி விட்டது. ஆனால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் 'வசூல் இலக்கை' எட்டுவது நிர்வாகிகளுக்கு சவாலாக உள்ளதால் தயக்கம் காட்டுகின்றனர்.
அதேநேரம் 'நிர்வாகிகளை களமிறக்கினால் இஷ்டத்திற்கும் வசூலித்து விட்டு தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விடுவார்களோ' என்ற அச்சம் மா.செ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி, பதவியில் 'பவர்புல்' ஆக உள்ள பல மா.செ.,க்கள் நிதியை தாங்களே கொடுத்துவிடும் எண்ணத்தில் உள்ளனர்.
தி.மு.க., சீனியர் நிர்வாகிகள் கூறியதாவது: தேர்தல் நிதி அதிகளவு வசூலித்தால் கட்சி பாராட்டும். அதேநேரம் வசூலில் ஈடுபடும் சில நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் முறைகேடில் ஈடுபட்டால் மா.செ.,க்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதனால் எதற்கு வம்பு என அத்தொகையை மா.செ.,க்களே வழங்கி விட்டு, தேர்தல் நெருங்கும்போது, உள்ளூர் 'ஸ்பான்சர்களை' பயன் படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த கூட்டங்களில் மா.செ.,க்கள் இந்த முடிவை நிர்வாகிகளிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளனர். இதனால் நிர்வாகிகள் சிலர் அதிருப்தியும், சிலர் நிம்மதியும் அடைந்துள்ளனர் என்றனர்.