தி.மு.க., மறுசீரமைப்பு குழுவால் கடும் அதிருப்தியில் நிர்வாகிகள்
தி.மு.க., மறுசீரமைப்பு குழுவால் கடும் அதிருப்தியில் நிர்வாகிகள்
ADDED : ஜூலை 02, 2026 06:25 AM

மதுரை: சட்டசபை தேர்தலில் தி.மு.க., 59 தொகுதிகளிலும், கூட்டணியுடன் சேர்ந்து மொத்தம் 73 தொகுதிகளிலும் வென்றது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் ஆசை, த.வெ.க.,வின் அபார வெற்றியால் தகர்ந்தது. எனவே, தோல்விக்கான காரணங்களை ஆராய 38 பேர் கொண்ட குழுவை தி.மு.க., அமைத்தது.
தொகுதிவாரியாக களஆய்வு நடத்திய அந்த குழு, 34 மா.செ.,க்கள் மீது நடவடிக்கை, 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மா.செ., என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை, ஸ்டாலினிடம் முன்வைத்தது. அந்த அறிக்கையின்படி நடவடிக்கைகளை எதிர்பார்த்து நிர்வாகிகள் காத்திருந்தனர்.
ஆனால், 'உடன்பிறப்பின் குரல்' எனும் ஆன்லைன் நிகழ்ச்சியில் 6 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்தபடி, தி.மு.க., மறுசீரமைப்புக் குழு அமைத்துள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார்.
இதன் வாயிலாக, தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்த குழுவின் பரிந்துரையை தி.மு.க., தள்ளிப்போடுகிறதா என கட்சிக்குள் அதிருப்தி உருவாகியுள்ளது.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தேர்தல் தோல்வி குறித்த ஆய்வுக்குழு அறிக்கை மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால் நடவடிக்கை எடுத்தால் த.வெ.க.,விற்கு ஓடிவிடுவர் என தலைமை அஞ்சுகிறது.
இதனிடையே, வரும் 5ம் தேதி லண்டன் செல்லும் ஸ்டாலின் குடும்பத்தினர், 20ம் தேதி திரும்புகின்றனர். அதுவரை அதிருப்தி நிர்வாகிகள் த.வெ.க.,வுக்கு தாவி விடக் கூடாது என்பதற்காக மறுசீரமைப்பு குழுவை ஸ்டாலின் நியமித்துள்ளாரோ என்று தான் தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
