குப்பைக்கும் வரி போட்டது தி.மு.க., அரசு: பழனிசாமி
குப்பைக்கும் வரி போட்டது தி.மு.க., அரசு: பழனிசாமி
ADDED : ஆக 26, 2025 05:04 AM

மணப்பாறை: தமிழகம் முழுதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று மணப்பாறையில் பேசியதாவது:
விவசாயிகள் எந்நேரமும் நீர் இறைக்கும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக, மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் அ.தி.மு.க., ஆட்சியில் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்று ஷிப்ட் முறையில் விவசாயிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
'கிணற்றை காணோம்' என்று சொல்லி போகும் இடம் எல்லாம் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். கிணற்றை காணோம் என்று சொல்வதற்கு பதிலாக, நேரடியாக தி.மு.க.,வையே காணோம் என்று சொல்லி பதாகைகள் வைத்திருக்கலாம்.
தி.மு.க., அமைச்சர்கள், இனிமேல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். அதனால், மிச்சமிருக்கும் ஏழு மாதங்களில் முடிந்த வரை கொள்ளையடித்து, பணத்தை சேகரிக்க வேண்டும் என ஆளாய் பறக்கின்றனர். தமிழக அரசில், கொள்ளையோ கொள்ளை நடக்கிறது.
தற்போதைய தி.மு.க., ஆட்சியில் 67 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தொழில் செய்ய முடியாமல் தொழில் சாலைகள் மூடப்படுகின்றன.
இத்தனை பெரிய அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டப் பின்பும், மின் வாரியம் கடன் சுமையில் தத்தளிக்கிறது. காரணம், தவறான நிர்வாகம் தான். குடி நீர், சொத்து வரி என எல்லாவற்றையும் உயர்த்திய தி.மு.க., அரசு, குப்பைக்கும் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.
அரசுப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துகின்றனரா என பார்க்க வேண்டும்' என்று.
இதற்காகவா, பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புகிறோம்? படிக்கும் மாணவர்களை அரசு கொச்சைப்படுத்தி உள்ளது. தமிழகம் போதை மாநிலமாக மாறி விட்டது என்பதை அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
துணை முதல்வர் உதயநிதி, போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின், உறுதிமொழி எடுத்து என்ன பயன்?
31 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஜாதி, மத சண்டைகள் இல்லை. தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.