கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க., ரகசிய பேச்சு; தொகுதிகள் குறைப்பால் கடும் அதிருப்தி
கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க., ரகசிய பேச்சு; தொகுதிகள் குறைப்பால் கடும் அதிருப்தி
UPDATED : பிப் 11, 2026 05:45 AM
ADDED : பிப் 11, 2026 05:10 AM

தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்காமல், ரகசிய பேச்சு நடத்துவதாலும், தொகுதிகளை குறைக்கும் முடிவில் இருப்பதாலும், தி.மு.க., மீது கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
வழக்கமாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன், கூட்டணி கட்சிகளிடம் பேச்சு நடத்த, தி.மு.க.,வில் குழு அமைக்கப்பட்டு விடும். இந்த தேர்தலில், சில கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்கின்றன.
ஆனால், 'எக்காரணம் கொண்டும் யாருக்கும் கூடுதல் தொகுதிகளை வழங்கக் கூடாது; அதிக இடங்களில் நாமே போட்டியிட வேண்டும்' என்பதில், முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
தொகுதி பங்கீடு நடத்த குழு அமைத்து, அதிகாரப்பூர்வ பேச்சு நடந்தால், அது குறித்த செய்திகள் வெளியாகி, தொண்டர்களுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு, கூட்டணி உடையவும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான், குழு அமைப்பதை தள்ளிப்போடுகிறார், ஸ்டாலின்.
அதன்படி, மூத்த அமைச்சர்கள் நேரு, வேலு வாயிலாக, கூட்டணி கட்சி தலைவர்களிடம் மட்டும் ரகசிய பேச்சு நடக்கிறது. கூட்டணி இறுதி செய்யப்படாததால், காங்கிரசுடன் பேச்சு நடக்கவில்லை.
முஸ்லிம் லீக், ம.ம.க., - கொ.ம.தே.க., ஆகிய கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகள்; வேல்முருகன், கருணாஸ் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி என உறுதியாகி விட்டது. பண்ருட்டிக்கு பதிலாக, நெய்வேலியை வேல்முருகன் கேட்டிருக்கிறார். அதிகாரப்பூர்வ குழு அமைத்ததும், இக்கட்சிகள் கையெழுத்து போடும்.
கடந்த முறை, இரு கம்யூ., கட்சிகளும் தலா 6 தொகுதிகள் வாங்கி, தலா 2ல் தான் வென்றன. எனவே, இம்முறை தலா ஐந்து தொகுதிகள் ஒதுக்குவதாக, தி.மு.க., அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
அதற்கு, 'தி.மு.க., மட்டும் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் வென்று விட்டீர்களா; நீங்கள் மட்டும், ஏன் அதிக இடங்களில் நிற்கிறீர்கள்' என, கேட்டு மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் முரண்டு பிடிக்கிறார்.
அதற்கு, 'நீங்களே இ.கம்யூ.,விடம் பேசி, கூடுதல் தொகுதிகளை பெற்றுக்கொள்ளுங்கள்' என நேரு கூறியுள்ளார். இதனால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், அவர்களுக்குள் பேசி வருகின்றனர்.
அதேபோல, 'உதயசூரியன் சின்னத்தில் நின்றால், மீண்டும் ஆறு தொகுதிகளை தருகிறோம்; தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், மூன்று தான்' என, ம.தி.மு.க.,வுக்கு சொல்லப்பட்டுள்ளது. இதற்கு ம.தி.மு.க., முதன்மைச் செயலர் துரை வைகோ ஒப்புக் கொள்ளாததால் இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால், 'ஏழு தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பு இல்லை' என, தி.மு.க., தலைமை உறுதியாக இருப்பதால், அங்கும் இழுபறி நீடிக்கிறது.
அதிருப்தியாக இருக்கும் கம்யூனிஸ்டுகள், வி.சி., - ம.தி.மு.க., கட்சிகளிடம், முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார். எல்லாம் சுமூகமாக முடிந்த பின்னரே, குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

