தி.மு.க.,வில் நீங்கள் எந்த அணி முதல்வர் கேள்வி; நிர்வாகிகள் அதிர்ச்சி
தி.மு.க.,வில் நீங்கள் எந்த அணி முதல்வர் கேள்வி; நிர்வாகிகள் அதிர்ச்சி
ADDED : ஆக 18, 2025 05:40 AM

சென்னை: 'தி.மு.க.,வில் நீங்கள் எந்த அணி என, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளிடம், முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியது, நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம், கட்சி நிர்வாகிகளுடன், 'ஒன் டூ ஒன்' சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சட்டசபை தொகுதி நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அப்போது நிர்வாகிகள், 'ஒரத்தநாடு தொகுதியில் இருக்கும், முத்தரையர் சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று, ஐயம்பட்டி கிராமத்தை, தனி ஊராட்சியாக உருவாக்கி தர வேண்டும் எனக் கூறியதற்கு, பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி, அதிகாரிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக வந்த குற்றச்சாட்டிற்காக, அவரை தனியாக அமரவைத்து, முதல்வர் கண்டித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள், முதல்வரை சந்திக்க செல்லும்போது, நீங்கள் பழனிமாணிக்கம் அணியா அல்லது துரைசந்திரசேகர் அணியா என, முதல்வர் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்க முடியாமல், நிர்வாகிகள் திணறி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் தலைமையில் ஒரு அணி, தற்போதைய மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான துரை சந்திரசேகர் தலைமையில் ஒரு அணி செயல்படுவதாக, தலைமைக்கு புகார் வந்தது. அதையடுத்தே, கிண்டல் செய்யும் வகையில் முதல்வர் அப்படி கேட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.