தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு
தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு
ADDED : ஜூன் 24, 2025 04:54 AM

கோவை: “தோல்வி பயம் காரணமாக, முருகன் மாநாடு குறித்து, தி.மு.க.,வினர் ஏதேதோ பேசி வருகின்றனர்,” என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:@@su
பழனியில், தி.மு.க., அரசு நடத்திய மாநாடு மட்டுமே உண்மையான முருக பக்தர்கள் மாநாடு என்றும், மதுரையில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வர மாட்டார்கள் என்றும் தி.மு.க.,வினர் கருதினர். ஆனால், மதுரையில் மாநாடு நடக்கும் முன்பே, மூன்று லட்சம் பேர் வந்து சென்றனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டுக்கு இரண்டு லட்சம் பேர் வந்தனர். மொத்தம் ஆறு லட்சம் பேர், பங்கேற்றுள்ளனர். சிறு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. ஒரு போலீஸ் கூட, மாநாட்டு வளாகத்தில் இல்லை. எனினும், மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் கட்டுப்பாட்டுடன் ஒழுங்காகவும், பயபக்தியுடனும் பங்கேற்றனர்.
மாநாட்டின் மிகப் பிரமாண்டமான வெற்றியை பார்த்ததும், தோல்வி பயத்தில் தி.மு.க.,வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் ஏதேதோ உளறியபடி பேசுகின்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், நெற்றியில் பூசப்பட்ட விபூதியை வி.சி., தலைவர் திருமாவளவன் அழித்ததற்காக, அவர் கூறும் விளக்கம் நம்பும்படியாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.