பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கும் மசோதா; பார்லி., கூட்டுக்குழுவுக்கு உறுப்பினர் தர தி.மு.க., மறுப்பு
பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கும் மசோதா; பார்லி., கூட்டுக்குழுவுக்கு உறுப்பினர் தர தி.மு.க., மறுப்பு
UPDATED : நவ 15, 2025 07:08 AM
ADDED : நவ 15, 2025 12:27 AM

நமது டில்லி நிருபர்
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க நேரிட்டால், அவர்களை பதவிநீக்கம் செய்ய வழிவகுக்கும் மசோதா குறித்து, ஆய்வு செய்யும் பார்லிமென்ட் நிலைக்குழுவில் இடம்பெறுவதற்கு கட்சியின் சார்பில் உறுப்பினர் பெயரை தரும்படி பலமுறை கேட்டும் தி.மு.க., தர முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பிரதமர், முதல்வர்கள் மற்றும் மத்திய - மாநில அமைச்சர்கள் தீவிரமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா, கடந்த பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டடது. அரசுகளுக்கு தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே அரசு நிர்வாகத்தை நடத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே, இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
ரகளை
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சபையில் நிகழ்ந்த கடும் ரகளையை அடுத்து, இந்த முக்கிய மசோதா குறித்து விரிவாக ஆய்வு, செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார் என்பதை இறுதி செய்யும் பணி துவங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு முக்கிய கட்சியிடமும், பெயரைத் தாருங்கள் என லோக்சபா செயலக அதிகாரிகள் கேட்டனர்.
பெயர்களை விரைந்து அளிக்கும்படியும், உரிய ஒத்துழைப்பை வழங்கும்படியும் கேட்டு, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரான கிரண் ரிஜுஜு அலுவலகத்திலிருந்தும் தகவல்கள் அனுப்பப்பட்டன. இவ்வாறு பலமுறை கேட்டும், காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்., ஆகிய கட்சிகள், எம்.பி.,க்களின் பெயர்களைத் தருவதற்கு முன்வரவில்லை.
இதனால், பெரும் காலதாமதம் ஏற்பட்டது. அடுத்த கூட்டத்தொடருக்கான அறிவிப்பும் வெளியாகி விட்டது. இதனால், கூட்டுக்குழு அமைப்பதில் இழுபறி ஏற்படும் நிலை உருவாகத் துவங்கியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. புவனேஸ்வரைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி. அபராஜிதா சாரங்கி, இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவி ர, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சி.வி.சண்முகம் உள்ளிட்ட, 31 உறுப்பினர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
புறக்கணிப்பு
இந்த கூட்டம் விரைவில் கூடி மசோதா குறித்து ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் வரலாற்றில் முக்கிய எதிர்க்கட்சிகள் இடம் பெறாமல், கூட்டுக்குழு அமைக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லோக்சபா செயலக அதிகாரிகள் கூறியதாவது: அரசு தரப்பில் எதிர்க்கட்சிகளை அணுவதற்கு பலமுறை முயற்சி எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும், உருப்படியான பதில் வரவில்லை. காங் கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த எம்.பி.,க்கள் ராகுல், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியும் பலனில்லை.
தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் பாலு, சிவா, கனிமொழி ஆகிய தரப்புகளும், இவ்விஷயத்தில் பதில் தரவில்லை. திரிணமுல் காங்., மூத்த எம்.பி., அபிஷேக் பானர்ஜியிடம் கேட்டதற்கு இந்த குழுவை புறக்கணிப்பதாக கூறிவிட்டார். அதேசமயம், எதிர்க்கட்சிகள் தரப்பில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியா சுலே, ஏ.ஐ.எம்.ஐ.எம்., -எம்.பி., ஒவைசி, அகாலி தள எம்.பி., ஹர்சிம்ரத் கவுர்பாதல் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

