தி.மு.க., சொன்னதோ 19,260; செய்வதோ 2340: ஆசிரியர்கள் நியமன முடிவில் டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி
தி.மு.க., சொன்னதோ 19,260; செய்வதோ 2340: ஆசிரியர்கள் நியமன முடிவில் டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 24, 2025 01:23 AM

மதுரை:தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 19,260 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துவிட்டு தற்போது 2340 இடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளது. இதனால் டி.இ.டி., தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகளாக காத்திருக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிருப்தியில் உள்ளனர்.
அரசு தொடக்க பள்ளி களில் 2011 வரை கல்வித்தகுதி வேலை வாய்ப்பு பதிவு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடந்தது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி 2008 முதல் 2010 வரை 16,401 ஆசிரியரும், ஜெயலலிதா 2011 முதல் 2015 வரை 12,259 ஆசிரியரும், 2012 டிச.,13ல் ஜெயலலிதாவால் 20,920 இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
அதற்கு பின் நியமனங்கள் இல்லாததால் தொடக்க கல்வித்துறை ஆசிரியர் பற்றாக்குறையால் தத்தளிக்கிறது.
ஆனால் தமிழக பட்ஜெட்டுகளில் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனம் இல்லாததால் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு 'கமிஷன்' அள்ளிக்கொடுக்கும் திட்டப் பணிகள் (ஸ்கீம்ஸ்) தான் ரூ. பல கோடிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மகிழ்ச்சியளித்த தி.மு.க., 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 2024ல் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் சட்டசபையில் ஜன.,2026 க்குள் 19,260 ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் நியமிக்கப்படுவர் என அறிவித்தார். இது டி.இ.டி., தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை தந்தது. ஆனால் நிதி நிலையை காரணம் காட்டி தற்போது 2340 பணியிடங்களை மட்டும் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யில் ஒவ்வொரு ஆண்டும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும்போது டி.ஆர்.பி.,யால் மட்டும் ஏன் முடியவில்லை. அப்படி ஒரு அமைப்பு தேவையா என ஆசிரியர்கள் கொந்தளிக்கின்றனர்.
முரண்படும் அமைச்சர்கள் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வர்கள் கூட்டமைப்பு தலைமை நிர்வாகி சவுமியா சுரேஷ் கூறியதாவது: ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் கோரிக்கைவைக்கும் போது 'நிதித்துறை ஒப்புதல் பெற்று நியமிக்க முயற்சிப்பதாக' குறிப்பிடுகிறார். நிதித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கும் போது 'கல்வி அமைச்சர் கேட்கும் நிதியை ஒதுக்க தயார்' என்கிறார். அமைச்சர்களுக்குள் உள்ள இந்த முரண்பாடு பணி நியமனங்களை கேலி கூத்தாக்குகின்றன.முதல்வர் சார்பில் 19,260 ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்படுவர் என அறிவிக்கப்படுகிறது. ஆனால் 2342 பணியிடங்கள் தான் நிரப்பப்படும் என கல்வி அமைச்சர் தெரிவிக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தொடக்க கல்வித்துறையில் கூடுதல் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்
நமது நிருபர்.