கம்யூ., தலைவர்களுடன் தி.மு.க., ரகசிய பேச்சு: கட்சி நிர்வாகிகள் கொந்தளிப்பு
கம்யூ., தலைவர்களுடன் தி.மு.க., ரகசிய பேச்சு: கட்சி நிர்வாகிகள் கொந்தளிப்பு
UPDATED : பிப் 14, 2026 10:23 AM
ADDED : பிப் 14, 2026 06:27 AM

- நமது நிருபர் -
கம்யூனிஸ்ட் தலைவர்களை வளைப்பதற்காக, அவர்களுடன் தி.மு.க., தலைமை ரகசிய பேச்சு நடத்துவது, அக்கட்சி நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கம்யூ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சு நடத்த, பிப்., 22ல் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்குள் கூட்டணி கட்சிகளை சரிகட்ட, தி.மு.க., மேலிடம் முடிவு செய்துவிட்டது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் வீரபாண்டியன் ஆகியோரிடம், தி.மு.க., அமைச்சர்கள் நேரு, வேலு ஆகியோர் ரகசியமாக பேசுகின்றனர்.
கூட்டணி சார்ந்த எந்த விவகாரமாக இருந்தாலும், மாநில, தேசிய நிர்வாகிகளிடம் முன் வைத்து, எடுக்கப்படும் முடிவுகளைத் தான், பேச்சின்போது முன்வைக்க வேண்டும். ஆனால், நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் கம்யூ., மாநில தலைமை, தி.மு.க.,வுடன் ரகசியமாக பேச்சு நடத்துகிறது. கடந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஆறு தொகுதிகள் வாங்கி, தலா இரண்டில் தான் வென்றன. எனவே, இம்முறை தலா ௫ தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., முடிவெடுத்துள்ளது.
இதற்காகத் தான், மாநிலச் செயலர்களை தனியாக அழைத்து, தி.மு.க., தரப்பில் ரகசிய பேச்சு நடத்துகின்றனர். தி.மு.க.,வுக்கு சாதகமாக தொகுதி பங்கீட்டை முடிக்க, விதிமுறைகளை மீறி ரகசிய பேச்சில் கம்யூ., தலைமைகள் ஈடுபடுவது, கட்சியின் எதிர்காலத்தை சிதைக்கும். இவ்வாறு கூறினர்.

