தி.மு.க., ஆட்சி இருக்கக் கூடாது பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்
தி.மு.க., ஆட்சி இருக்கக் கூடாது பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்
ADDED : டிச 29, 2024 03:46 AM

வானுார்: ''தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி ஆட்சி இருக்கக்கூடாது'' என, பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
புதுச்சேரி அருகேயுள்ள பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில், நேற்று பா.ம.க., பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. இதில், பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
பா.ம.க.,விற்கு தனி வரலாறு உள்ளது. தனி நபர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சிகளுக்கு இடையில், மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி பா.ம.க., கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை, 95 ஆயிரம் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை போராட்டக்களத்திற்கு கொண்டு வந்தேன். அப்போதைய அரசு, 21 உயிர்களை சுட்டுக் கொன்றது.
கடந்த, 1989ம் ஆண்டு வன்னியர் சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில், மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, நமக்கான உரிமைகளை மீட்டெடுக்க பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்போதைய ஆளுங் கட்சி, பு.தா.அருள்மொழி உள்ளிட்ட ஐந்து பேரை, குண்டர் சட்டத்தில் அடைத்தது. கட்சியை தொடங்குவதில் பின்வாங்காமல், விழுப்புரத்தில் நடந்த பேரணியில், அரசு தடியடி நடத்தியது.
இப்படி பல்வேறு அடக்குமுறைகளுக்கு இடையே, பா.ம.க., தொடங்கப்பட்டது. கட்சி துவங்கி, 35 ஆண்டுகள் கடந்தும், ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
நாம் ஆட்சிக்கு வந்து இருந்தால், 4 நாட்களுக்கு முன் நடத்திய தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்றால், வெற்றி நம் பக்கம். வரும் 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான் அமையும். யாருடன் கூட்டணி என்பதை, நான் பார்த்துக் கொள்கிறேன்.
ஒருமுறை தப்பு செய்தால், அதே தவறை மீண்டும் செய்வோம் என்று அர்த்தம் இல்லை. புதிய பாதையில் பயணிப்போம்.
அது எந்த பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அதற்கு முன்போ முடிவு செய்வேன்.
அடுத்த ஆட்சியில் நாம் பங்கேற்போம். தமிழகம், புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்போவது நம் கூட்டணிதான். இங்குள்ளவர்கள் அமைச்சர்களாக இருப்பர்.
தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி ஆட்சி இனி இருக்கக்கூடாது; இனிமேலும் வரக்கூடாது. அதற்காக அனைவரும் சபதம் ஏற்போம்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

