கனிமொழி கைக்குள் திமுக மாணவரணி; கடும் கொந்தளிப்பில் உதயநிதி
கனிமொழி கைக்குள் திமுக மாணவரணி; கடும் கொந்தளிப்பில் உதயநிதி
UPDATED : ஜூன் 24, 2026 08:37 AM
ADDED : ஜூன் 24, 2026 01:30 AM

- நமது நிருபர் -
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கட்டுப்பாட்டில் இருந்த தி.மு.க., மாணவரணி, தற்போது கட்சியின் துணை பொதுச்செயலர் கனிமொழியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இது குறித்து, மாணவரணி நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வில் மொத்தம் 25 சார்பு அணிகள் உள்ளன. இதில், இளைஞரணி, மகளிரணிக்கு அடுத்து, முக்கிய பங்காற்றுவது மாணவரணி. தலைமையின் கட்டுப்பாட்டுக்குள்தான், எப்போதும் மாணவரணி செயல்படும். அதன்படி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கட்டுபாட்டுக்குள் இருந்த மாணவரணி, உதயநிதி வந்த பின், அவரின் உத்தரவுப்படி செயல்பட்டது.
பெரிய அளவில் அந்த அணியின் செயலராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., எழிலரசன், ராஜிவ் காந்தி, மாநில துணை செயலர்கள் உள்ளிட்டோர், உதயநிதி ஆதரவாளர்களாக இருந்தனர். மகளிரணி கனிமொழி கட்டுக்குள் இருக்கிறது. தன் எல்லையை விரிவுபடுத்தும் விதமாக, மகளிர் தொண்டரணி என புது அணியை, சில ஆண்டுகளுக்கு முன் கனிமொழி உருவாக்கினார்.
தொடர்ந்து, பெண் நிர்வாகிகளை, தனது ஆதரவாளர்களாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். இந்நிலையில், மாணவரணி பொறுப்பாளராக இருக்கும் துணை பொதுச்செயலர் ராஜா வாயிலாக, தனது ஆதரவாளரான வீரமணி என்ற பெண் நிர்வாகியை, மாணவர் அணியின் செயலராக்கினார்.
'நீட்' தேர்வு, ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், முதன்முறையாக மாணவரணி ஆர்ப்பாட்ட மேடையில், கனிமொழியின் படம் இடம் பெற்றது.
ஆர்ப்பாட்டம் குறித்த விளம்பரங்கள், நிகழ்ச்சி நடந்த இடத்தில், உதயநிதி படத்தை விட, கனிமொழி படங்களே பெரிய அளவிலும், அதிக அளவிலும் வைக்கப்பட்டன.
தேர்தலுக்கு பின், தி.மு.க., சார்பில் நடக்கும் முதல் ஆர்ப்பாட்டம். ஆனால், உதயநிதி சென்னையில் இருந்தபோதும், இதில் பங்கேற்க அவருக்கு அழைப்பு தரவில்லை.
பங்கேற்க மறுப்பு
தேர்தலுக்கு முன் நடந்த மகளிர் மண்டல மாநாடுகளில் உதயநிதி பங்கேற்றார். ஆனால், தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில், கடந்த வாரம் கனிமொழி நடத்திய மகளிரணி, மகளிர் தொண்டரணி நிகழ்ச்சிகளில், உதயநிதி அழைக்கப்படவில்லை.
தற்போது, மாணவரணி நிகழ்ச்சிக்கும் உதயநிதி அழைக்கப்படாதது, அந்த அணி மொத்தமும் கனிமொழி கைக்கு சென்று விட்டதை காட்டுகிறது.இதனால், அதிருப்தியான அணியின் மாநில துணை செயலர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், பங்கேற்க மறுத்துள்ளளர்.
ஆனால், மாணவரணி பொறுப்பாளர் ராஜா பங்கேற்றதால், தவிர்க்க முடியாமல் பலரும் வந்துள்ளனர். மாணவரணி கைமீறி செல்வதை உணர்ந்த உதயநிதி, கொதிப்படைந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
