அ.தி.மு.க.,வை தேர்தலில் வீழ்த்த முத்தரையர் ஓட்டுகளுக்கு தி.மு.க., குறி
அ.தி.மு.க.,வை தேர்தலில் வீழ்த்த முத்தரையர் ஓட்டுகளுக்கு தி.மு.க., குறி
ADDED : பிப் 27, 2026 05:07 AM

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை வீழ்த்த, முத்தரையர் சமுதாய ஓட்டுகளை குறி வைத்து தி.மு.க., களமிறங்கி உள்ளது.
தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் முத்தரையர் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இவர்கள், 30 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர்களாக திகழ்கின்றனர்.
கடந்த 1977 சட்டசபை தேர்தலில் இருந்து, முத்தரையர் சமூகத்தினர் பெரும்பாலும் அ.தி.மு.க.,விற்கே ஓட்டளித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், முத்தரையர் சமூக ஓட்டுகளை அ.தி.மு.க., இழக்கத் துவங்கியது. கடந்த 2021 தேர்தலில், முத்தரையர் சமூகம் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில், ஒன்றில் கூட அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனினும், வரும் தேர்தலில், முத்தரையர் ஓட்டுகளை பெற, அ.தி.மு.க., எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். அவர், த.வெ.க.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால், அ.தி.மு.க.,வில் உள்ள முத்தரையர் சமூகத்தின் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி, பூனாட்சி ஆகியோர் அரசியல் களத்தில் தீவிரமாக இல்லாததால், முத்தரையர் சமூக ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், 2021 போல், இந்த சட்டசபை தேர்தலிலும், முத்தரையர் சமூக ஓட்டுகளை பெற, தி.மு.க., களமிறங்கி உள்ளது. தற்போது, திருச்சி, பெரம்பலுார் தொகுதி எம்.பி.,க்கள், வேறு சமூகத்தினர் என்பதால், சட்டசபை தேர்தலில், அதிகளவில் முத்தரையர் சமூக வேட்பாளர்களை நிறுத்த, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.
தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளித்திருக்கும், தமிழர் தேசம் என்ற கட்சியை நடத்தி வரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் செல்வகுமாருக்கு, ஒரு தொகுதியை ஒதுக்கவும் தி.மு.க., முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

