தி.மு.க.,வில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு; 'சீனியர்கள்' முட்டுக்கட்டையால் தாமதமா?
தி.மு.க.,வில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு; 'சீனியர்கள்' முட்டுக்கட்டையால் தாமதமா?
ADDED : நவ 22, 2024 05:42 AM

மதுரை: தி.மு.க., மாவட்ட செயலாளர்களின் (மா.செ.,) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உதயநிதியின் திட்டத்திற்கு, சீனியர் தலைவர்கள் சிலர் முட்டுக்கட்டை போடுவதால் தாமதமாகிறது என கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.
தற்போது தி.மு.க.,வில் நிர்வாக ரீதியாக 72 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் அமைச்சர்களே மா.செ.,க்கள் பொறுப்பும் வகிக்கின்றனர். மா.செ.,க்கள் பலர் சீனியர்களாக உள்ளனர். அவர்கள் அதிகார பலத்துடன் கோலோச்சுவதால் பல மாவட்டங்களில் மா.செ.,க்கான எதிர்ப்பு கோஷ்டிகள் உருவாகியுள்ளன.
இந்நிலையில் கோலோச்சும் மா.செ.,க்களுக்கு 'செக்' வைக்கும் வகையில் தான் '2 சட்டசபை தொகுதிக்கு ஒரு மா.செ.,' என்ற ரீதியில் புதிய மாவட்டங்களை உருவாக்க துணைமுதல்வர் பொறுப்புக்கு வந்த பின் உதயநிதி தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் தி.மு.க.,வின் இளைஞர்கள் ஓட்டுக்களை தக்கவைக்க இளைஞர்களுக்கு புதிய மா.செ.,க்கள் பதவியை வழங்கும் எண்ணத்திலும் மாவட்டங்கள் பிரிப்பு திட்டத்திற்கு உதயநிதி அவசரம் காட்டி வருகிறார். ஆனால் ஸ்டாலினிடம் நெருக்கமான சில தலைவர்கள் இத்திட்டத்திற்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டு வருவதாக கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.
தென் மாவட்ட தி.மு.க., சீனியர் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: உதயநிதியின் முயற்சியால் புதிய மாவட்டங்கள் பிரிப்பு உறுதியாகிவிட்டது. தலா 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ., என்ற முடிவில் இருந்து தற்போது மதுரை, கோவை, திருநெல்வேலி என குறிப்பிட்ட மாவட்டங்களை மட்டும் பிரித்து புதிய மா.செ.,க்களை நியமிக்கும் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் அமைச்சர் உள்ளிட்ட சில சீனியர்களை மா.செ., பதவியில் இருந்து ராஜினாமா செய்ய கட்சி வலியுறுத்துகிறது. ஆனால் அந்த அமைச்சர் மறுப்பு தெரிவித்து தன் மகனுக்கு அந்த பதவியை கேட்டு ஸ்டாலினை வற்புறுத்தி வருகிறார். இளைஞரணி நிர்வாகிகளுக்கு மா.செ., பதவி வழங்க வேண்டும் என்ற உதயநிதியின் வேகத்திற்கு சிலர் முட்டுக்கட்டையாக உள்ளனர்.
'தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் பெரும் சவாலாக இருக்கும். நடிகர் விஜய் அரசியல் வருகை போன்ற பல அரசியல் சூழல்களை எதிர்நோக்கும் நேரத்தில் இதுபோன்ற மாற்றம் சீனியர்களை அதிருப்திக்குள்ளாக்கும். மாவட்டங்கள் பிரிப்பில் அவசரம் வேண்டாம்' என முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக உள்ள சீனியர் தலைவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கி தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் தான் புதிய மா.செ.,க்கள் நியமனம் தள்ளிப்போகிறது என்றனர்.