தி.மு.க., போக்குவரத்து சங்க தேர்தல் வழக்கு: துரைமுருகன் பஞ்ச்; சண்முகத்திற்கு அடி
தி.மு.க., போக்குவரத்து சங்க தேர்தல் வழக்கு: துரைமுருகன் பஞ்ச்; சண்முகத்திற்கு அடி
UPDATED : ஜூன் 27, 2025 12:11 PM
ADDED : ஜூன் 27, 2025 12:04 PM

மாநகர போக்குவரத்து ஊழியர் சங்க தேர்தல் விவகாரத்தில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனுக்கு வெற்றியும், தொ.மு.ச., பொதுச் செயலர் சண்முகத்திற்கு தோல்வியும் கிடைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச.,வின் அங்கமான, சென்னை மாநகர் போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்தில் 18,000 உறுப்பினர்கள் உள்ளனர். 2006ம் ஆண்டுக்கு பின், இந்த சங்கத்திற்கு தேர்தல் நடத்தாமல், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
முன்வரவில்லை
கடந்த பிப்., 28ம் தேதிக்குள் தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்களும் பெறப்பட்டன. ஆனால், தேர்தலை மே மாதம் தள்ளிவைப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தினால், தங்களுக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக நியமிக்க முடியாமல் போய் விடும் என தொ.மு.ச., கருதியது.
அதனால், தேர்தல் நடத்த முன்வரவில்லை. சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள், நடத்துநர் பிரிவு செயலர், ஓட்டுநர் பிரிவு செயலர், டெக்னிக்கல் பிரிவு செயலர், மத்திய சங்க நிர்வாகிகள் என, முறையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்பின், சங்கத் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் விதி. ஆனால், தேர்தல் நடத்தாமல், தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் பதவிகளுக்கான நிர்வாகிகள் பட்டியல், அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில், கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகனிடம் கையெழுத்து பெற முயற்சிக்கப்பட்டது. ஆனால், அவர் மறுத்து விட்டார். 'முறையாக தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் பட்டியலுக்கு தான் கையெழுத்திட முடியும்' என துரைமுருகன் கூறி விட்டார்.
அதையும் மீறி, மாநகர் போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் தலைமை சங்க நிர்வாகிகள் பட்டியல், கடந்த 22ல் வெளியிடப்பட்டது. அதில், தலைவராக பி.டி.சி., ரவி என்ற சிவகுமார், பொதுச்செயலர் ஆறுமுகம், பொருளாளர் பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
'நோட்டீஸ்'
புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படமும் அறிவாலயத்தால் வெளியிடப்பட்டது. ஆனால், தேர்தலுக்காக காத்திருந்த தொழிலாளர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர். அதையடுத்து, புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
தி.மு.க., தலைமை நிலைய செயலர், மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்க நிர்வாகி உட்பட ஆறு பேருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து, தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பட்டியலை தான் ஏற்று கையெழுத்திடுவேன் என கூறிய துரைமுருகனுக்கு வெற்றியும், தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகளை நியமிக்க காரணமாக இருந்த தொ.மு.ச., பொதுச் செயலர் சண்முகத்திற்கு தோல்வியும் கிடைத்துள்ளது' என்றார்.