தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தி.மு.க., உதயநிதி கைதாகி விடுதலை!

தி.மு.க., உதயநிதி கைதாகி விடுதலை!

தி.மு.க., உதயநிதி கைதாகி விடுதலை!

26


ADDED : ஆக 05, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

26

ADDED : ஆக 05, 2026 04:47 AM


26
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியதாக, தஞ்சையில் ஒன்பது பிரிவுகளின் கீழ் போடப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி, 48, சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் உதய நிதி தரப்பு மனு தாக்கல் செய்தது. மனு மீதான விசாரணையின் போது, 'உதயநிதியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும் நோக்கம் இல்லை. அவரிடம் விசாரணை நடத்திய பின், காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப் படுவார்' என, அரசு தரப்பு கூறியது. அதை ஏற்று, போலீஸ் விசாரணை முடிந்து, இரவே அவரை விடுவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டு


சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியின் வீடு உள்ளது.

அங்கு, மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். தி.மு.க., சார்பில் , நேற்று முன்தினம் தஞ்சாவூரில் காவிரி பிரச்னை தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி பங்கேற்றார். அப்போது, பெண்கள் பற்றி ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய போலீசார், ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

எதிர்ப்பு


இவ்வழக்கு தொடர்பாக, உதயநிதியை நேற்று கைது செய்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியன், உதயநிதியின் தங்கை கணவர் சபரீசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உதயநிதி கைது செய்யப்பட்டு இருக்கும் தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால், அவரது வீடு முன், ஏராளமான தி.மு.க., தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள், விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். எங்களை மீறி, உதயநிதியை அழைத்துச் செல்ல முடியாது என, சாலையில் படுத்து மறியல் செய்தனர்.

இதற்கிடையே, 'உதயநிதிக்கு முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதில், உத்தரவு வந்த பின், உதயநிதியை அழைத்துச் செல்லுங்கள்' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும், உதயநிதி குடும்பத்தினரும், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய நீண்ட பேச்சுக்கு பின் போலீசார் தங்களின் வாகனத்தில் உதயநிதியை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தி.மு.க.,வினர் வாகனத்தை மறித்து, அதில் ஏற முயன்றனர். போலீசார் சுற்றி நின்று, அவர்களை தடுத்தனர். முண்டியடித்ததால், வாகனம் நகர முடியாத நிலை ஏற்பட்டது.

பின், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். ஆனாலும், விடாமல் நீலாங்கரை சந்திப்பில் அமர்ந்து, சாலை மறியல் செய்து வாகனத்தை மறித்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்திய பின், வாகனம் புறப்பட்டது.

முதலில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்திற்கு தான், உதயநிதியை அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர். அங்கு ஏராளமான தி.மு.க.,வினர் கூடியதால், அருகில் உள்ள செங்கிப்படி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், போலீஸ் வாகனத்திலிருந்து இறங்க மறுத்த உதயநிதி, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் தான், புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கூட்டிச் செல்லுங்கள் என்றார்.

பேச்சுவார்த்தைக்கு பின், போலீசார் கூறியதை ஏற்று, செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் மாலை, 6:30 மணி அளவில் சென்றார். அவரிடம், 6:45 மணி அளவில் விசாரணை துவங்கியது. எஸ்.பி.சுந்தரவதனம், டி.எஸ்.பி., அழகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின், இரவு, 8:10 மணி அளவில் உதயநிதி விடுவிக்கப்பட்டார். அதாவது, கைதாகி, 10 மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து திருச்சி வழியாக சென்னை புறப்பட்டார்.

ஐ.பி.எஸ்., அதிகாரியுடன் சபரீசன் வாக்குவாதம்


தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய போலீசார், உதயநிதியை கைது செய்ய அவரின் வீட்டிற்கு நேற்று காலை, 8:30 மணிக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்ய, சென்னை போலீசின் மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் பெரும் படையுடன் வந்தார்.
உங்கள் கணவரை, பெண்களுக்கு எதிரான குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய வந்திருப்பதாக, உதயநிதி மனைவி கிருத்திகாவிடம், விஜயகுமார் கூறினார். அப்போது, அங்கு உதயநிதி தங்கை கணவரும், ஸ்டாலின் மருமகனுமான சபரீசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இருந்தனர். அவர்கள், விஜயகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



ஆரத்தழுவிய மகன்


போலீசார் கைது செய்யத்தான் போகின்றனர் என்பது உறுதியான பின், உதயநிதி கலக்கத்துடன் காணப்பட்டார். மனைவி கிருத்திகாவை பார்த்து, 'கவலைப்படாமல் இரு' என்றார். அருகே இருந்த மகன் இன்பநிதி, தன் தந்தையை ஆரத்தழுவினார். அப்போது இன்பநிதி, தந்தையின் முதுகில் தட்டிக் கொடுத்து, போலீசாருடன் அனுப்பி வைத்தார்.



உதயநிதியை பின்தொடர்ந்த 'மாஜி'க்கள்


உதயநிதியை போலீசார் கைது செய்து, சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்ற வேனில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன், வழக்கறிஞர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., பரந்தாமன் உள்ளிட்டோரும் ஏறிக்கொண்டனர்.
இவர்களை பின் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் வேலு, நேரு, பன்னீர்செல்வம் ஆகியோரும் கார்களில் சென்றனர். இவர்களின் கார்கள், வண்டலுார் அருகே தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதி தி.மு.க.,வினர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், வேலு, நேரு ஆகியோர், போலீஸ் வாகனத்தை பின் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



ஒன்பது பிரிவுகள் என்னென்ன?


ஆபாசமாக இரட்டை அர்த்தத்துடன் பேசியதாக, உதயநிதி மீது, தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய போலீசார், ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் விபரம்:
பி.என்.எஸ்., 196 - பகைமையை துாண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்
பி.என்.எஸ்., 192 - கலவரத்தை துாண்டுதல்
பி.என்.எஸ்., 352 - பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், ஒருவரை வேண்டுமென்றே அவமதித்தல்
பி.என்.எஸ்., 79 - பெண்ணின் கண்ணியத்திற்கு அல்லது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல்
பி.என்.எஸ்., 61 - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து, சட்ட விரோத செயலை செய்ய திட்டமிடுதல்
பி.என்.எஸ்., 351 - மிரட்டல் விடுத்தல்
பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு 4
தகவல் தொழில் பிரிவு சட்டம் 67
பி.என்.எஸ்., 351/2 -- ஒருவரை பயமுறுத்துவது, உடல், சொத்து அல்லது நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துதல்.



நலம் விசாரிப்பு


போலீசார் நடத்திய தடியடியில், தி.மு.க.,வின் தென்சென்னை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பார்த்திபன், 50; தொண்டர்கள் ஜான், 40, இருதயசாமி, 52, ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் நீலாங்கரை அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த மூவரிடமும் மொபைல் போன் வாயிலாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.



'கைதுக்கு பயப்பட மாட்டேன்'


போலீசார் கைது செய்து, தஞ்சாவூர் அழைத்து சென்ற போது, உதயநிதி அளித்த பேட்டி: கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். மேகதாது அணை, காவிரி நீர் பிரச்னைக்கு குரல் கொடுக்காத த.வெ.க., அரசை கண்டித்து, தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். அப்போது, 'ரீல்ஸ்' வெறி முத்திப்போய் உள்ள த.வெ.க., அரசின் அமைச்சர்களை கண்டித்தும் பேசினேன்.
அதற்காக, நான் பேசாத ஒன்றை பேசியதாக, 'கட், காப்பி, பேஸ்ட்' பண்ணி, பொய் செய்தியை பரப்பி, அதற்காக என்னை கைது செய்துள்ளனர். கைதுக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது; சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us