அமைச்சர்களை 'விளாசிய' தி.மு.க., பெண் கவுன்சிலர்! மேயர் பதவி கிடைக்காததால் கொந்தளிப்பு
அமைச்சர்களை 'விளாசிய' தி.மு.க., பெண் கவுன்சிலர்! மேயர் பதவி கிடைக்காததால் கொந்தளிப்பு
ADDED : ஆக 07, 2024 04:02 AM

கோவை : கோவை மாநகராட்சியின் புதிய மேயராக, தி.மு.க.,வை சேர்ந்த, 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர். இப்பதவியை எதிர்பார்த்திருந்த மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் சீனியர் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர். அறிவிப்பை கேட்ட மத்திய மண்டல தலைவர் மீனா, நேற்று முன் தினம் தேம்பி தேம்பி அழுதார். இது கட்சிக்கு நெருடலை ஏற்படுத்தியது.
மேயர் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெறுவதற்கு முன், 'சமாதான கூட்டம்', கோட்டைமேட்டில் உள்ள மண்டபத்தில், தலைமை கழக நிர்வாகி அன்பகம் கலை முன்னிலையில் நடந்தது.
அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''நமக்கு எல்லா சூழ்நிலையும் சரியாக சென்று கொண்டிருக்கிறது. எல்லோரையும் அனுசரித்துச் செல்வதை, கட்டாயமாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
கேள்வியால் பரபரப்பு
அப்போது, மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி, ''இரண்டு வருடங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை என்பதற்காக மேயரை மாற்றுகிறீர்கள். 50 ஆண்டுகளாக தி.மு.க.,வுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்; எங்களை ஏன் ஒதுக்குகிறீர்கள்? கட்சிக்காக கோடி கோடியாய் பணத்தை செலவிட்டு இருக்கிறோம். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போயிருக்கிறோம். எந்த அடிப்படையில் அவர்களுக்கு, மேயர் பதவி ஒதுக்குனீர்கள் என்பதற்கு, விளக்கம் சொல்ல வேண்டும். எங்களுக்கு ஏன் மேயர் பதவி தரவில்லை,'' என கேட்டார்.
பதற்றமடைந்த அமைச்சர் நேரு, ''அம்மா... அம்மா... உட்காரும்மா... உட்காருங்க... நான் சொல்றேன் கேளுங்க; உட்காருங்க...'' என கையசைத்து, சாந்தியை இருக்கையில் அமரச் சொன்னார். அவர் விடாப்பிடியாக, தனது கேள்வியை தொடர்ந்ததால், கூட்டத்தில் பரபரப்பு தொற்றியது.
'ஆதங்கம் இருக்கும்'
அப்போது நேரு, ''ஒவ்வொருத்தருக்கும் ஆதங்கம் இருக்கும்; அதை விடுங்கள். அம்மா... நீங்கள் எது எது சொல்கிறீர்களோ, அதை செய்து தருகிறோம்,'' என்றார். அமைச்சர் நேருவின் சமாதானத்தை ஏற்காத சாந்தி, ''பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம். கட்சிக்காக பரம்பரை பரம்பரையாக உழைக்கும் நாங்கள் ஒதுக்கப்படுகிறோம்,'' என்று கூறி, கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். அருகில் இருந்த கவுன்சிலர்கள், அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.
மாநகராட்சி அலுவலகத்துக்கு கவுன்சிலர்களை அழைத்துச் செல்ல அறிவுறுத்திய அமைச்சர் நேரு, ''மீனா லோகு, நீங்கள் போங்கள்; பிறகு பேசிக் கொள்ளலாம்,'' என அறிவுறுத்தினார்.
பொறுக்க முடியாது
அப்போது, மீண்டும் சாந்தி கூறுகையில், ''இதற்கு மேல் பொறுக்க முடியாது. நாம் போய் எதுவும் கேட்கவில்லை. அவர்களாக வந்து கேட்டார்கள்; 'ரிப்போர்ட்' எடுத்தார்கள்,'' என்றார். ''மூத்த அமைச்சர்களிடம் இப்படியா பேசுவது,'' என, அவரை, கல்விக்குழு தலைவர் மாலதி சமாதானம் செய்தார். மண்டபத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேச முயன்ற சாந்தியை, மற்ற கவுன்சிலர்கள் தடுத்து, அழைத்துச் சென்றனர். அமைச்சர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகி முன்னிலையில், பெண் கவுன்சிலர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.