'போஸ்டர்' வழியே விஜய்க்கு தி.மு.க., பதில்: வெற்றி என கூறுகின்றனர் த.வெ.க.,வினர்
'போஸ்டர்' வழியே விஜய்க்கு தி.மு.க., பதில்: வெற்றி என கூறுகின்றனர் த.வெ.க.,வினர்
ADDED : செப் 28, 2025 05:22 AM

த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் பகுதிகளில், தி.மு.க., சார்பில் அரசின் சாதனைகளை விளக்கும் போஸ்டர்கள், கடந்த வார பிரசாரத்தின்போது விஜய் வைத்த குற்றச்சாட்டுகளுக்கான பதிலுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழகத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், நடிகர் விஜய் துவக்கி உள்ள த.வெ.க., முதல் முறையாக களம் இறங்க உள்ளது. கட்சியை மக்களிடம் எடுத்து செல்ல, விஜய் வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்து வருகிறார்.
வாரம் இரண்டு சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு கூடும் கூட்டம், ஆளும் கட்சியான தி.மு.க.,வை மிரள வைத்துள்ளது. கடந்த வாரம் நாகப்பட்டினம், திருவாரூர் தொகுதிகளில் விஜய் பிரசாரத்தின்போது, அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார்.
அதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனுக்குடன் பதில் அளித்தனர். மேலும் அவர் சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்வதை, துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் செய்தார். அப்பகுதிகளில், தி.மு.க., சார்பில், கரூரில் கடந்த நான்கு ஆண்டுகளில், தி.மு.க., அரசின் சாதனைகள் என, அங்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு, போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.
மேலும், நாகப்பட்டினம் 'ஸ்பீச் ரிப்போர்ட் கார்டு' என்ற பெயரிலும், 'போஸ்டர்கள்' ஒட்டப்பட்டிருந்தன. அதில், நாகப்பட்டினம் பிரசாரத்தில், விஜய் கூறிய குற்றச்சாட்டுகள், அதற்கு அரசு அளித்த பதில்களை பட்டியலிட்டு, விஜய் ஐந்துக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்று, பெயில் ஆகி உள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் கீழே, 'வாட் ப்ரோ, இட்ஸ் வெரி ராங் ப்ரோ' என்ற ஆங்கில வாசகம் இடம் பெற்றிருந்தது.
'இதுவரை எந்த கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்கும், இவ்வாறு போஸ்டர் ஒட்டாத தி.மு.க., தற்போது விஜய் பிரசாரம் செய்யும் இடங்களில், போஸ்டர்களை ஒட்டி வருவது, விஜய் பிரசாரத்தால் அக்கட்சி கலக்கம் அடைந்திருப்பதை காட்டுகிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி' என, த.வெ.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்
-- நமது நிருபர் - .