ADDED : ஜன 18, 2025 01:30 AM

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், செங்குந்த முதலியார் சமுதாயம் பெரும்பான்மையாக உள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக, கொங்கு வேளாளர் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகளும் அதிகம் உள்ளன.
இவர்களை தவிர, அருந்ததியர் சமுதாயத்திற்கு, 6 சதவீதம் ஓட்டுகளும், பிறமொழி பேசும் மாநிலங்களை சேர்ந்தோர் ஓட்டுகள், 3 சதவீதமும் உள்ளன.
மேலும், பிராமணர், நாயுடு, நாயக்கர், செட்டியார், பிள்ளை, வன்னியர், முக்குலத்தோர், நாடார், தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட சமுதாயத்தினரின் ஓட்டுகள், 5 சதவீதம் வரை உள்ளன.
இந்த ஓட்டுகளை மொத்தமாக அள்ள, தி.மு.க., தரப்பில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் அருந்ததியர் சமுதாய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட 3 சதவீதம் உள்ஒதுக்கீடே காரணம் என்பதை, அச்சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளில் தனிக்குழு அமைத்து பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
'அருந்ததியர் சமுதாயத்தினர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் அப்படி பேசி வரும் நிலையில், அச்சமுதாயத்தினர் ஓட்டுகளை கவரும் வகையில், அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு வழங்கியதையும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததையும் புள்ளி விபரங்களோடு பிரசாரம் செய்ய, தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -