UPDATED : அக் 16, 2024 06:39 AM
ADDED : அக் 16, 2024 12:17 AM

கோவை : தீபாவளி இனிப்புகளில் விலங்கு கொழுப்பு எதுவும் கலக்கப்படவில்லை என, உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபகாலமாக, இனிப்புகளில் விலங்கு கொழுப்பு சேர்ப்பது குறித்து, பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இனிப்புகளை பொறுத்தவரை, லட்டு போன்ற இனிப்புகளில் பசும் பாலிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய், நெய் பயன்படுத்தப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், கோவையில் விற்பனையாகும் இனிப்புகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக, புகார் ஏதும் வந்ததா என, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ் செல்வனிடம் கேட்டோம்.
தமிழ்செல்வன் கூறியதாவது:
கோவையில், இனிப்புகளில் விலங்குகள் கொழுப்பு எதுவும் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால், இனிப்புகளின் வாசனையில் இருந்தே தெரிந்துவிடும்.
தீபாவளிப் பண்டிகையை பொறுத்தவரை, இனிப்புகளில் நெய்க்கு பதிலாக பாமாயில், வனஸ்பதி பயன்படுத்தப்படும். இதை தடுக்க தொடர் ஆய்வு நடத்தப்படுகிறது. தீபாவளி இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை, மூன்று நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. அடைக்கப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிற எண்ணெய்களை பயன்படுத்தக் கூடாது. இனிப்புகளை தயாரிக்க, ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட, பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சூடான உணவுகளை, பிளாஸ்டிக் டப்பாக்கள், பைகளில் வைத்திருக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில், அனைத்து விபரங்களும் தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும். தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
கோவையில், இனிப்புகளில் விலங்குகள் கொழுப்பு எதுவும் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால், இனிப்புகளின் வாசனையில் இருந்தே தெரிந்துவிடும்.