UPDATED : ஜன 18, 2024 03:53 AM
ADDED : ஜன 18, 2024 02:02 AM

'ரோடுகளை சீரமைக்கும்போது, எக்காரணத்தை முன்னிட்டும் அவற்றின் உயரம் அதிகமாகக் கூடாது' என, ஐகோர்ட் அதிரடிஉத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் ரோடுகள் பராமரிக்கப்படுகின்றன.
இவற்றில், நகர்ப்புறங்களில் உள்ள ரோடுகள் தான், அதிக வாகனப் போக்குவரத்து மற்றும் பல காரணங்களால் அடிக்கடி பழுதாகின்றன.
இந்த ரோடுகளைச் சீரமைப்பதற்கு, ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை ரோட்டைச் சீரமைக்கும் போதும், ஏற்கனவே பழுதாகியுள்ள ரோட்டின் மீதே, புதிதாக ஜல்லி, சரளை மண் மற்றும் தார் போட்டு ரோடு போடுவது வழக்கமாகவுள்ளது.
பழைய ரோட்டைப் பெயர்த்து எடுக்கும் 'மில்லிங்' முறையைக் கடைப் பிடிப்பதில்லை.
உயரமாகிறது ரோடு
ரோட்டின் மீதே ரோடு போடுவதால், சில ஆண்டுகளில் ரோட்டின் உயரம், 2 அடி வரை உயர்ந்து விடுகிறது. ரோடுகள் உயரமாவதால், வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்கள், தாழ்வாகி, படி அல்லது சாய்வு தளம் அமைத்து, ரோட்டில் ஏறிச் செல்லும் அவல நிலை உருவாகி விடுகிறது.
மழைக்காலங்களில் ரோட்டில் பாயும் வெள்ளம், வீடு, கடைகளுக்குள் புகுந்து விடுகிறது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில், இந்தப் பிரச்னையால் பல லட்சம் குடியிருப்புவாசிகள், வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புக்கு தீர்வு காண்பதற்கு, அரசு தரப்பில் முயற்சிஎடுக்கவே இல்லை.
இதனால், சமீபகாலமாக ரோட்டை விட, 4 - 5 அடி உயரத்தில் அடித்தளம் அமைத்து, கட்டடம் கட்டப்படுகிறது. அதற்காக, ரோட்டோரத்தில் சாய்வு தளம் அமைக்கப்படுகிறது. இதனால் ரோட்டின் இடம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்ற புதிய பிரச்னையும் உருவாகி வருகிறது.
இந்நிலையில், கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, இது தொடர்பாக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது. மனுவை, தலைமை நீதிபதியை உள்ளடக்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது.
வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், 2021 மே 12ல், தமிழக அரசின் தலைமைச் செயலர் சார்பில், சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அதில், ரோடுகளைப் புதுப்பிக்கும்போது, அவற்றின் உயரம் அதிகமாகாத வகையில், 'மில்லிங்' மேற்கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டது.
அதன்பின், ரோடு சீரமைப்புப் பணிகளின் போது, 'மில்லிங்' செய்வது, சடங்காக மட்டுமே நடந்து வருகிறது. சில உள்ளாட்சி பகுதிகளில் மட்டும், 'மில்லிங்' செய்யாமல் ரோடு போடுவதற்கு, அபராதம் விதிக்கப்படுகிறது.
ஐகோர்ட் உத்தரவு
இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஐகோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்து வந்த ஐகோர்ட், கடந்த மாதம் 15ம் தேதி, முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதில், 'தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளபடி, ரோடுகளின் உயரம் அதிகமாகாத வகையில், புதுப்பிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -