தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/மொபைல் எண்ணுக்கு இருப்பது போல வங்கி கணக்கிற்கும் போர்ட்டபிலிட்டி வசதி கிடைக்குமா?

மொபைல் எண்ணுக்கு இருப்பது போல வங்கி கணக்கிற்கும் போர்ட்டபிலிட்டி வசதி கிடைக்குமா?

மொபைல் எண்ணுக்கு இருப்பது போல வங்கி கணக்கிற்கும் போர்ட்டபிலிட்டி வசதி கிடைக்குமா?

1


ADDED : ஆக 24, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : ஆக 24, 2026 04:32 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக பழைய வீட்டை விற்று, அதில் வரும் வருமானத்தை வங்கியில் சேமிக்க, எவ்வளவு காலம் வரை அந்த தொகையை வங்கியில் வைத்திருக்க முடியும்?

- ராஜகோபாலன், சென்னை

வீட்டை விற்ற நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி வரை, அந்த பணத்தை சாதாரண சேமிப்பு கணக்கிலோ, நிரந்தர வைப்பு நிதியிலோ வைத்திருக்க முடியும். அந்த ஐ.டி.ஆர்., கடைசி தேதிக்குள் வேறு புதிய வீடு வாங்கவில்லை என்றால், வரிச்சலுகையை பெறுவதற்காக, பயன்படுத்தப்படாத மூலதன ஆதாய தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 'மூலதன ஆதாயக் கணக்கு திட்டத்தில்' டிபாசிட் செய்ய வேண்டும். இந்த சிறப்பு வங்கி கணக்கில் பணத்தை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்க முடியும்.

வீட்டை விற்ற தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டை வாங்குவதற்கு இந்த பணத்தை பயன்படுத்தி கொள்ளலாம். நீங்களே சொந்தமாக இடம் வாங்கி, புதிய வீடு கட்டுவதாக இருந்தால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை இந்த கணக்கில் பணத்தை வைத்திருக்கலாம். மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னரும் வீட்டை வாங்கவோ, கட்டவோ இல்லை என்றால், பயன்படுத்தப்படாத அந்த தொகைக்கு முழுமையான, நீண்டகால மூலதன ஆதாய வரியை கட்ட நேரிடும்.

நான் டிமேட் கணக்கு வாயிலாக பங்கு சந்தையில் பங்கு வர்த்தகம் செய்கிறேன். டிமேட் கணக்கில் வாரிசுதாரர் விபரங்களை பதிவு செய்துள்ளேன். என் காலத்திற்கு பிறகு, உரிய ஆவணங்கள் கொடுத்து வாரிசுதாரர் டிமேட் கணக்கை மாற்றிக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஆனால், பங்குகளின் பெயர் மாற்றம் தனியாக செய்ய வேண்டுமா?

எஸ். வெங்கடேஸ்வரன், சென்னை திருவான்மியூர்

டிமேட் கணக்கில் நாமினி பதிவு செய்திருந்தால், நிறுவன வாரிசாக பெயர் மாற்ற தேவையில்லை. புரோக்கரிடம் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை நாமினி கொடுத்தால், டிமேட் கணக்கில் உள்ள பங்குகள் அனைத்தும் ஒரே முறையில் அவரது டிமேட் கணக்கிற்கு மாற்றப்பட்டு விடும்.

என் கணவர் இறந்துவிட்டார். அவரது நிறுவனத்திடம் பி.எப்., தொகையை பெற அணுகியபோது, ​​கடந்த ஒரு மாதமாக இ.பி.எப்.ஓ., வலைதளத்தில் சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். தரவு மாற்றம் பணிகள் முடிவடைந்திருந்தாலும், அவர்கள் இந்த தீர்வுக்கான முறையான நடைமுறைகளை மேற்கொள்ள விரும்பவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

- வாணி சரஸ்வதி, பெங்களூரு

ஆன்லைன் விண்ணப்பத்துக்காக காத்திருக்க வேண்டாம். நிறுவனத்திடம், உங்கள் கணவரின் பி.எப்., தொகையை முழுமையாக பெற படிவம் 20, மனைவியான உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் தகுதியிருந்தால் மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்க படிவம் 10-டி, உங்கள் கணவர் பணியில் இருக்கும்போது இறந்தால், இ.டி.எல்.ஐ., காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2.50 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு தொகையை பெற படிவம் 5-ஐ.எப்., ஆகியவற்றை பூர்த்தி செய்து தருமாறு கேளுங்கள். இந்த படிவங்களில் நீங்களும் கையெழுத்திட்டு, நிறுவன ஹெச்.ஆர்., மேலாளரது கையொப்பம், முத்திரையை பெற்று, உங்கள் பகுதிக்குரிய பெங்களூரு இ.பி.எப்.ஓ., அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பியுங்கள்.

கூடவே, கணவரின் இறப்பு சான்றிதழ், உங்களின் ஆதார், பான் கார்டு மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றையும் இணைத்து கொடுங்கள்.

நான் 2026 -- 27 ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்திருந்தேன். கூடுதலாக வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது நாள் வரையிலும் 'ரீபண்டு' வரவில்லை. அதை பெற வருமான வரித்துறை அலுவலகத்தை அணுக வேண்டுமா, இணையத்தில் பதிவு செய்ய வேண்டுமா?

- பீ.சத்தியமூர்த்தி, நீலகிரி

வருமான வரித்துறையின் 'இ -- -பைலிங்' வலைதளத்தில் நுழைந்து, உங்களின் 'ரிட்டன் ஸ்டேட்டஸ்' என்ன நிலையில் உள்ளது என்பதை முதலில் பாருங்கள். ரீபண்டு வராமல் தாமதமாவதற்கு, உங்கள் வங்கி கணக்கு 'ப்ரீ-வேலிடேட்' செய்யப்படாமல் இருப்பது அல்லது ரீபண்டு பெறுவதற்காக அந்த கணக்கு 'நாமினேட்' செய்யப்படாமல் இருப்பது, ஒரு காரணமாக இருக்கலாம்.

ஸ்டேட்டஸில் 'ரீபண்டு பெயில்டு' என்று இருந்தால், சரியான வங்கி கணக்கை ப்ரீ-வேலிடேட் செய்து, அதை ரீபண்டு பெறுவதற்காக நாமினேட் செய்துவிட்டு, வலைதளத்தின் 'சர்வீசஸ்' பகுதியில் உள்ள 'ரீபண்டு ரீ-இஷ்யூ' வாயிலாக கோரிக்கை கொடுங்கள். எல்லாம் சரியாக இருந்தும் ரீபண்டு தாமதமானால், இ - - -பைலிங் தளத்தில் உள்ள 'கிரிவென் சஸ்' பகுதியில் புகார் அளியுங்கள்.

எங்கள் மகளுக்கு 23 வயதாகிறது; 25 வயதில் திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறாள். அவளுடைய சம்பளப் பணத்தை நாங்கள் தொடுவதில்லை; சேமிக்க சொல்லி இருக்கிறோம். அதை எதில் முதலீடு செய்யலாம் ?

- ஈ.தனலட்சுமி, ஈரோடு

திருமணத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே இருப்பதால், 70 சதவீத பணத்தை வங்கி தொடர் வைப்பு, பிக்சட் டிபாசிட் மற்றும் தங்கத்தில் சேமிக்க சொல்லுங்கள். மீதமுள்ள 30 சதவீத பணத்தை, எதிர்காலத்திற்காக மியூச்சுவல்பண்டு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

அலைபேசி நிறுவனங்களுக்குள் 'மொபைல் போர்ட்டபிலிட்டி' இருப்பது போல் வங்கிகளுக்கும் 'பேங்கிங் போர்ட்டபிலிடி' கொண்டு வந்தால் என்ன? அனைத்து வங்கிகளும் ஆர்.பி.ஐ.,யின் ஆளுமையின் கீழ்தானே இயங்குகிறது ?

- வி.சந்தானகோபாலன், மதுரை

நல்ல ஆலோசனை. ரிசர்வ் வங்கியும் கடந்த 2017லேயே இந்த வங்கி கணக்கு எண் போர்ட்டபிலிடி பற்றி யோசித்துள்ளது. ஆனால், இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்றால், மொபைல் எண்கள் அனைத்தும் 10 இலக்கங்கள் மட்டுமே. ஆனால், வங்கி கணக்கு எண்கள் 9 முதல் 18 இலக்கங்கள் வரை உள்ளன. மேலும், அவை வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., குறியீட்டுடன் பிணைந்தவை. இதை மாற்றுவது, உலகளாவிய பணப்பரிவர்த்தனை அமைப்பையே மாற்றுவதாகும்.

இந்த சிக்கலை தவிர்க்கவே, 'யு.பி.ஐ.,' முறையை ஆர்.பி.ஐ., கொண்டு வந்தது. இன்று உங்களின் மொபைல் எண்ணே உங்கள் நிரந்தர வங்கி அடையாளமாக மாறிவிட்டது. நீங்கள் எந்த வங்கிக்கு மாறினாலும், அதே மொபைல் எண் / யு.பி.ஐ., - ஐ.டி., வாயிலாக உங்கள் பணப்பரிவர்த்தனையை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்கிறீர்கள். டிஜிட்டல் முறையில் இதுவும் ஒரு வகை 'போர்ட்டபிலிடி' தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us