தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/இந்தியாவில் போர் விமான இன்ஜின் தயாரிப்பு: ரிலையன்ஸ் - ரோல்ஸ் ராய்ஸால் சாத்தியமாகுமா?

இந்தியாவில் போர் விமான இன்ஜின் தயாரிப்பு: ரிலையன்ஸ் - ரோல்ஸ் ராய்ஸால் சாத்தியமாகுமா?

இந்தியாவில் போர் விமான இன்ஜின் தயாரிப்பு: ரிலையன்ஸ் - ரோல்ஸ் ராய்ஸால் சாத்தியமாகுமா?

2


ADDED : ஆக 24, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 04:50 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் அதிநவீன போர் விமான இன்ஜினை உருவாக்கும் சாத்தியத்தை ஆராயும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டனின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளன. இதை இரண்டு நிறுவனங்களும் 'வர்த்தக உத்தி அறிக்கை' என குறிப்பிட்டுள்ளன.

இந்தியாவில் 'ஏரோஸ்பேஸ் காஸ் டர்பைன் காம்ப்ளக்ஸ்' எனப்படும் வான்வெளி எரிவாயு விசையாழி வளாகத்தை அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதே திட்டத்தின் நோக்கம். வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, சோதனை மற்றும் இன்ஜினின் முழு ஆயுட்காலத்துக்கான ஆதரவு ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், மேம்பட்ட நடுத்தர போர் விமானமான ஏ.எம்.சி.ஏ.,வுக்கான உள்நாட்டு, இறையாண்மை கொண்ட போர் விமான இன்ஜினை உருவாக்க இரு நிறுவனங்களும் தங்களின் திறன்களை ஒருங்கிணைக்க முன்வந்துள்ளன.

ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி, முக்கிய தொழில்நுட்பங்களில் இந்தியாவின் வர்த்தக உத்தி தன்னிறைவை உறுதி செய்ய இறையாண்மை கொண்ட திறன் அவசியம் என கூறியுள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் தலைமை செயல் அதிகாரி டுபான் எர்ஜின்பில்ஜிக், தற்சார்பு இந்திய விமான தொழில்துறையை உருவாக்கும் பாதையில் இது முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.

இறுதியாகவில்லை


இந்த அறிவிப்பில் முதலீட்டு தொகை, நிறுவனங்களின் பங்கு விகிதம், தொழிற்சாலை அமையும் இடம் அல்லது எந்த இன்ஜின் மாடல் தயாரிக்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சகம், டி.ஆர்.டி.ஓ., அல்லது ஹெச்.ஏ.எல்., ஆகியவையும் இந்த அறிவிப்பில் பங்குதாரர்களாக இல்லை.

இது இன்னும் கூட்டு நிறுவனமோ, உற்பத்தி ஒப்பந்தமோ அல்ல; அத்தகைய முயற்சிக்கான சாத்தியத்தை ஆராயும் கட்டத்தில் மட்டுமே இருப்பதாக இரண்டு நிறுவனங்களும் தெளிவுபடுத்தியுள்ளன. இருப்பினும், இவ்வளவு பெரிய நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் திட்டமில்லாமல் இத்தகைய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு குறைவு. எனவே இதை முக்கியமான தொடக்கமாக பார்க்கலாம்.

ஆனால், அதில் இடம்பெறும் 'இறையாண்மை' என்ற சொல்லை கவனமாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாட்டிடம் ஒரு போர் விமான இன்ஜின் இருப்பது மட்டும் தொழில்நுட்ப இறையாண்மை அல்ல.

தொழிற்சாலை, உற்பத்தி உரிமம், இன்ஜின் வரைபடங்கள் ஆகியவை இருக்கலாம். ஆனால், உண்மையான இறையாண்மை என்பது அடுத்த தலைமுறை இன்ஜினை சுயமாக வடிவமைத்து உருவாக்கும் திறன் கொண்டிருப்பதாகும். ஒரு போர் விமானத்துக்கு 110 கிலோ நியூட்டன் உந்துவிசை தேவைப்பட்டால், அதற்கேற்ப அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தை தாங்கும் டர்பைன் பிளேடுகளை உருவாக்க வேண்டும். பல ஆண்டுகள் தொடர்ந்து தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டால்தான் ஒரு நாட்டிடம் இன்ஜினை உருவாக்கும் திறனும், அடுத்த இன்ஜினை வடிவமைக்கும் அறிவும் உருவாகும்.

காவேரி திட்டம்


இந்தியாவின் காவேரி இன்ஜின் திட்டம் இதற்கான முக்கிய உதாரணம். இதற்காக ஜி.டி.ஆர்.இ.,க்கு 1989 மார்ச்சில் திட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆரம்ப செலவு கிட்டத்தட்ட 383 கோடி ரூபாய்; காலக்கெடு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள். பின்னர் செலவு 2,839 கோடி ரூபாயாக உயர்ந்தது.

2011ல் சி.ஏ.ஜி.,அறிக்கையின்படி, தேஜஸ் விமானத்தை இயக்கக்கூடிய இன்ஜினை உருவாக்க ஜி.டி.ஆர்.இ., தவறியது. செலவு 642 சதவீதம் அதிகரித்ததுடன், கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் தாமதமும் ஏற்பட்டது.

பிரச்னை, இந்திய பொறியாளர்களின் திறமையின்மை மட்டுமல்ல. தொடர்ச்சியான நிதி, நீண்டகாலம் ஒன்றாக பணியாற்றும் குழு, தேவையான சோதனை வசதிகள் ஆகியவை இல்லாததும் தான். உயரத்தில் ஏற்படும் அழுத்தம் மற்றும் வெப்பநிலையை தரையில் உருவாக்கி சோதிக்கும் வசதி இந்தியாவிடம் இல்லை. சோதனை விமானமும் இல்லை.

காவேரியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் காடக் ஆளில்லா விமானத்துக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை 140 மணி நேரத்துக்கும் மேல் சோதிக்கப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 75 மணி நேரம் ரஷ்யாவில் இல்யூஷன்-76 விமானம் கீழ் வானில் சோதிக்கப்பட்டது. ஜி.டி.ஆர்.இ., கிட்டத்தட்ட 1,600 கோடி ரூபாயில் உயர்நிலை சோதனை வசதி கோரியுள்ளது.

சீனாவின் அனுபவம்


சீனாவின் டபிள்யு.எஸ்.,-10 இன்ஜின் திட்டம் 1987ல் தொடங்கப்பட்டது. 2005ல் சான்றிதழ் பெற்றாலும், ஒற்றை இன்ஜின் போர் விமானத்தில் நம்பகமாக பயன்படுத்தும் நிலைக்கு வர 2019 வரை ஆனது. பல தோல்விகள் இருந்தபோதிலும் சீனா திட்டத்தை கைவிடவில்லை. அதன் தொடர்ச்சியாக டபிள்யு.எஸ்.,-10 இன்ஜின் உருவாக்கப்பட்டு ஜே20 போர் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அனுபவம், அதிநவீன விமான இன்ஜின் உருவாக்கத்துக்கு நீண்டகால முதலீடும், தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் அவசியம் என்பதை காட்டுகிறது.

சோதனை


இந்த திட்டம் வெற்றியடைய நான்கு விஷயங்கள் முக்கியம்: இந்தியாவில் டர்பைன் பிளேடுகள் தயாரிக்கப்படுமா? வெப்பத்தடுப்பு பூச்சு மற்றும் குளிரூட்டும் தொழில்நுட்பம் இங்கே உருவாகுமா? இன்ஜின் கட்டுப்பாட்டு மென்பொருளை இந்தியர்கள் எழுதுவரா? உயர்நிலை சோதனை வசதிகளுக்கு அரசு நிதியளிக்குமா? என்பவை அந்த நான்கு விஷயங்கள்.

ரிலையன்ஸ் -ரோல்ஸ் ராய்ஸ் முயற்சி நடைமுறைக்கு வந்து, இந்தியாவில் பாகங்கள் முதல் மென்பொருள், வடிவமைப்பு அதிகாரம் வரை உருவாக்கப்பட்டால் அது முக்கிய முன்னேற்றமாக இருக்கும்.

ஒரு இன்ஜினை நம் நாட்டில் தயாரிப்பது ஒரு நிலை; அடுத்த தலைமுறை இன்ஜினை நாமே வடிவமைத்து உருவாக்கும் திறனை பெறுவது முற்றிலும் வேறு நிலை. இந்த இரண்டாவது நிலையை நம்நாடு அடையும் போதுதான் உண்மையான தொழில்நுட்ப இறையாண்மை உருவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us