லஞ்ச சார் பதிவாளரை பாதுகாக்கிறது பதிவுத்துறை? 8 மாதமாகியும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை
லஞ்ச சார் பதிவாளரை பாதுகாக்கிறது பதிவுத்துறை? 8 மாதமாகியும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை
ADDED : அக் 02, 2024 04:01 AM

கோவை: அன்னுார் சார்பதிவாளர் செல்வபாலமுருகன் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து எட்டு மாதங்களாகி விட்டது; பத்திரப்பதிவு துறையில் இருந்து, அவர் மீது இன்று வரை துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவை மாவட்டம், அன்னுார் சி.எஸ்.ஆர்., நகரில் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் சார் பதிவாளராக இருப்பவர் செல்வபாலமுருகன்.
பத்திரம் பதிவு செய்வதற்கும், வில்லங்கச் சான்று பெறுவதற்கும் வரும் பொதுமக்களிடமும், பத்திர எழுத்தர்களிடமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது. கடந்த ஜன., 22ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
லஞ்சம் வாங்க சம்பள ஆள்
லஞ்சம் வாங்குவதற்காகவே பிரபு என்பவரை, தனிப்பட்ட முறையில் பணிக்கு அமர்த்தி, வாரந்தோறும் ரூ.3,000 சம்பளம் கொடுப்பதாகவும், லஞ்சப்பணத்தை கார் டிரைவர் மணி மூலமாக பெற்று, வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில், சார்பதிவாளர் செல்வபாலமுருகன் தெரிவித்திருக்கிறார்.
பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு எதிரே உள்ள பத்திரம் எழுதும் அலுவலகங்களில், பிரபுவை அழைத்துச் சென்று விசாரித்தபோது, சார்பதிவாளரிடம் வழங்குவதற்காக கொடுத்து வைத்திருந்த, 500 ரூபாய் நோட்டுகளில், 264 எண்ணிக்கையில், ரூ.1.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன்பின், சார்பதிவாளரின் கார் டிரைவர் மணியிடம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தனர். அப்போது, பிரபு கொடுக்கும் பணத்தை சார் பதிவாளரிடமோ அல்லது அவர் வழங்கும் வங்கி கணக்கிலோ செலுத்தி விடுவேன் என கூறியிருக்கிறார்.
டிரைவருக்கும், சார்பதிவாளருக்கும் இடையே, மொபைல் போன் 'வாட்ஸ்ஆப்' மூலம் நடந்த உரையாடல் ஆய்வு செய்யப்பட்டு, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து பதிவு செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி, இதுதொடர்பாக வழக்கு பதிந்து, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். இவ்வழக்கு விசாரணையை, லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்வதோடு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்து பத்திரப்பதிவுத்துறைக்கு அறிக்கை அனுப்பினர்.
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ரூ.1.32 லட்சம் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட அனைவரது வாக்குமூலமும் பெற்று, லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, எட்டு மாதங்களாகி விட்டது. இன்று வரை பத்திரப்பதிவு துறையில் இருந்து, சார்பதிவாளர் செல்வபாலமுருகன் மீது, துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது, லஞ்ச ஒழிப்புத்துறையினரை சோர்வடைய வைத்திருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கேட்டபோது, 'லஞ்சம் பெறுவோரை கண்காணித்து, நடவடிக்கை எடுக்கிறோம். பணம் பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்று, வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிக்கை அனுப்புகிறோம். பத்திரப்பதிவுத்துறையில் இருந்தே, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.